வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

சிவவாக்கியர் பாடல் 51

"சொற்குருக்க ளானதுஞ் சோதிமேனி யானதும்
மெய்க்குருக்க ளாயினும் வேணபூசை செய்கினும்
சற்குருக்க ளாயினுஞ் சாத்திரங்கள் சொல்லினு
மெய்க்குருக்க ளாயினுந் திரண்டுருண்ட தூமையே".

                                            சிவவாக்கியர் 51

வேதங்களை ஓதி ,பூஜைகள் செய்து பிழைப்பு நடத்துபவர்கள் இங்கே"குருக்கள்"எனப் பலராலும் அழைக்கப்படுகின்றனர்.

சாத்திரங்கள் பல படித்திருப்பினும், தாம் செய்யும் செயல்களாலும் ,பூஜை புணஸ்காரங்களாலும் நாங்களே தூய்மையானவர்கள் எனக்கூறிக் கொள்ளும் மானிடராய் இருந்தாலும் அவர்களும் அவர்கள் தீட்டு என எதைக் குறிப்பிடுகிறார்களோ அந்த தூமையால்தான் தாயின் சூதகத்தில் இருந்து உருண்டு திரண்டு மனித உடலெடுத்து இந்த மண்ணுலகிற்கு வந்த தூமைகள்தாம். 

 இடபிங்கலை இரண்டும் சுழுமுனையில் இனைந்து அக்கினி கலையில் நிலை நிற்கும்படி தவமியற்றி தன்னிலை மறந்து தவநிலையில் வாசியை வென்று வாசி நிலை மாறி சிவா எனும் நிலை ஆக ஆகியவர்கள்தாம் உடல் தூய்மையானவராம். இவ்வாறான கலையையுணர மதியற்றவன் எந்த பணியில் ஈடுபட்டாலும் அவர் தூமையானவராம்.

                                                             சிவா

அபிராமி அந்தாதி பாடல் 7

"ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர்
கதியுறும் வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும்,
மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும்
துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே"..

                       அபிராமி அந்தாதி பாடல் 7

 தயிர் கடையும் மத்தினைப் போல சுழன்று சுழன்று உன்னை தேடுகிறது என் ஆவி! ஆனாலும் எனக்கு தளர்வென்பதே இல்லாத வண்ணம் என்னை வழிநடத்த வேண்டும் தாயே!

 முப்பெரும் கடவுளர்கள் கூட உன்னையே துதித்து உனக்கு சேவை செய்கின்றனர்.

  புருவ மத்தியில் செந்தூர நிற நாடியாக நின்று விளங்கும் பேரழகுத் தாயே!

                                                                 சிவா

செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

அபிராமி அந்தாதி பாடல் 6

அபிராமி அந்தாதி 

"சென்னியது உன்பொன் திருவடித்தாமரை; சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம்; சிந்துர வண்ணப்பெண்ணே!
முன்னிய நின் அடி யாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உன் தன் பரமாகம பத்ததியே".

                       அபிராமி அந்தாதி பாடல் 6

விளக்கம் 

 யாம் தறுதலையாக திரிபவனில்லை .

 உன் திருவடியை யாம் கண்டு கொண்டதனால் தாமரை தன் இதழ்களை விரித்தது எனது தலையில்.மனமும் வாசனையோடு மலர்ச்சியுற்றது அம்மா திருமந்திரமே உன்னால் எமது மனமது திரமானது!

 இவை எல்லாம் உனது அடியார்களை யாம் கண்டு வணங்கி அவர்களது அடியொற்றி நடந்தால் விளைந்த விளைவே!
 ஆதலால் பரத்தை அடைந்திட ஆகமங்கள் எவை என்று எம்மால் உணர்ந்து கொள்ள முடிந்தது அபிராமித் தாயே !!!

                                                            சிவா

சனி, 22 பிப்ரவரி, 2025

தேஜோமயானந்தம் பாடல்.1கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்;கரடிவெம் புலிவாயையும்கட்டலாம்; ஒரு சிங்க முதுகின்மேற் கொள்ளலாம்;கட்செவி யெடுத்தாட்டலாம்;வெந்தழலி னிரதம்வைத் தைந்துலே கத்தையும்வேதித்து விற்றுண்ணலாம்;வேறொருவர் காணாம லுலகத் துலாவலாம்விண்ணவரை யேவல்கொளலாம்;சந்ததமு மிளமையோ டிருக்கலாம்; மற்றொருசரீரத்தி ன்ம்புகுதலாம்;சலமே னடக்கலாம்; கனன்மே லிருக்கலாம்தன்னிகரில் சித்திபெறலாம்;சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்றதிறமரிது; சத்தாகியென்சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே!தெசோ மயானனந்தமே"!. தாயுமான சுவாமிகள் பறந்தோடும் குதிரையையும் பெரிய மதம் பிடித்த யானையையும் வசியப்படுத்தி தன்வசம் ஆக்கலாம்.பசி மிகுந்த கரடி,புலி போன்றவை வாயைக் கட்டலாம்.சிங்கத்தின் முதுகில் ஏறி சவாரி செய்யலாம்.பாம்பை பிடித்து ஆட்டலாம்.வேகும் நெருப்பிலே இரும்பைப் போட்டு தங்கமாக்கி விற்று உண்ணலாம்.மற்றவர்கள் கண்களுக்கு தெரியாமல் எங்கும் உலாவலாம்.தேவர்களை எல்லாம் வேலை வாங்கலாம்.எப்பொழுதும் இளைமையோடு வாழலாம்.மற்றொரு உடலில் புகுந்து விளையாடலாம்.தண்ணீரில் நடக்கலாம், தீயில் குளிக்கலாம் எனக்கு நிகராக இந்த திறைமைகளைப் பெற்றவர்கள் யாராவது உண்டா உலகில் என்று கொக்கரிக்கலாம்.ஆனால் பொழுதன்றைக்கும் சஞ்சலங்களும், சபலங்களும், சந்தேகங்களும் நிறைந்த இந்த மனதை திருப்தியாக வைத்துக் கொள்ள முடியாது.மனதை ஆனந்தமாக வைத்துக் கொள்ள தெரிந்தவரே சிவானந்த சித்தர் ஆவார்.இந்த அறிவை எனக்கு வழங்கிய என் குருவாக இருந்து என்னை வழி நடத்தும் அறிவான தெய்வமே என் தேஜோமயானந்த குருவே!.சு.சிவா

அபிராமி அந்தாதி பாடல் 5

"பொருந்திய முப்புரை! செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை! அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே".

                      அபிராமி அந்தாதி பாடல் 5
 
அம்மையாகவும் இருந்து இறைவன் செய்யும் மூன்று பணிகள் பற்றிய உரையே முப்புரை!!

  1. தாயின் முலையில் பால் வெகுவாக சுரந்து தானாகவே சொரிவது போன்று குருவாக என் முன்னே தோன்றி ஞான உரையாடல் செய்கிறாய் நீயே தாயே!!!.

  2.  மனம் உன் மணியில் நின்று செயலாற்றுகிறது என்று கண்மணியே என்னை உணரவைத் தாயே!!!

 3. துரியாதீத நிலையில் ஒருவன் நிலையாய் நின்று  விளங்கும் போது அச்சீவனது உடலில் அமிர்த உற்பத்திக்கு என்று ஒரு கடைதல் நிகழ்ந்து அமிர்தம் மேலேற பின்னரே தொடர்ந்து கழிவாகிய விஷமும் ஏற அதைத் தடுத்தாட்கொண்டு அருள்புரியும் அம் மா  எனது பெரும் துணையே!

   அனைத்திலும் உயர்வானதையே எனக்கு அருள்கின்ற பேரழகியே!
வான்காந்த ஈர்ப்பே உன்னை நான் என் தலையில் சுமக்கிறேன் அம்மா அபிராமி!!!

                                                            சிவா

வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

அபிராமி அந்தாதி பாடல் 4

"மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே".

                     அபிராமி அந்தாதி பாடல் 4.

 எளிமை பொருந்திய மனிதர்களும்,

கண் இமை தேவலோக தேவர்களுக்கு இருக்காது ஆனால் இமையோடு படைக்கப்பட்டு இருந்தபோதிலும்  மனிதர்களிலும் சிலர் இமையாநாட்டத்தில் இருந்து தேடுகிறார்கள் அவ்வாறான தேவர்களுக்கும், 

ஓயாத எண்ணங்களின் குவியலாக விளங்கும் மாயையான கற்பனைத் தீர்மானங்களை விட்டுவிட்டு காலத்தின் முனையிலேயே நின்று செயலாற்றும் முனிவர்களும்,

 உன்னையே தலை வணங்கி நிற்கின்றனர் தலையாய இன்பத்தை எனக்கு தடையின்றி வழங்கும் தலைவியே!

 தலைக்குமேல் சந்திரனையும், பாம்பையும் (சந்திர கலை+குண்டலினி யோகம்)பகீரதி நிதிப் பிரவாகமாக அனுபவப் பேரின்பம் தரும் தாயே!

 நீயும் உன் மணவாளனும் என்னோடு பொருந்திட வேண்டுகிறேன் அபிராமித் தாயே!!!.

                                                           சிவா

வியாழன், 20 பிப்ரவரி, 2025

உடலே கோயில்

உலகின் அனைத்து ரகசியமும் உன் உடலுக்கு உள்ளே..!

மந்திரம் தேடாதே ஒரு தந்திரமும் நாடாதே உன்னைத் தேடு..! 

ஊர் ஊராக சுற்றாதே உன் உடலை சுற்று..!

ஊர் உனக்கு மகுடம் சூட்டி உத்தமன் என பட்டம் தந்தாலும்!

உடல் உன்னை கை விட்டால் உன் பட்டமும் உன் பதவியும்
பிடி சாம்பலாகி விடும்..!

புறத்தில் உன் குடும்பத்தை நேசித்தாய்....அது உன் குடும்பம் என கண்டும் கொண்டாய்...!

ஓடி ஓடி உழைத்தாய் உன் குடும்பத்திற்கு காவல் தெய்வமாக நின்றாய்..!

ஆனால் உனக்கு காவல் தெய்வமாக, உன் உயிருக்கு காக்கும் கடவுளாக,
இருப்பது உன் உடலே...!

அக குடும்பத்தை மறந்து விடாதே. உன் அக குடும்பம் உன் உடலே..!

உன் அக குடும்பம் சரியில்லை என்றால்
சூரிய குடும்பத்தில் நீ இருக்க இயலுவதில்லை..!

உன் உள் குடும்பம் உன் உடலே!

அதை மறந்தால் உன் வெளி குடும்பம் கதறினாலும்
உன்னை காக்கவும் யாரால் முடியும்..!

மற்ற உயிர்களுக்கு ஒருவன் செய்யும் பாவத்திற்கு
விமோசனம் உண்டு..!

ஒருவன் அவன் உடலுக்கே செய்யும் பாவத்திற்கு
விமோசனம் இல்லை...!

காரணம் அந்த உடல் அவன் உயிருக்காகவே
சிறப்பு மிக்க வரமாக கொடுக்கப்பட்டதால்..!

உடலுக்கு ஒருவன் செய்யும் தொண்டே  பூஜை..!

உடலுக்கு உள் சென்று உனக்காக உழைக்கும்
உறுப்புகளை வணங்குவதே ஆலயம் சென்று
வணங்குவதை விட உயர்வானது..!

உடல் அனுமதித்தால் தான் ஒருவன் சித்தனும் ஆக முடியும்..!

ஒருவன் எப்படி பட்டவன் ஆக வேண்டும் என்று தீர்மானிப்பது அவனின் எண்ணங்களே..!

ஆனால் அந்த எண்ணங்களை தீர்மானிப்பது உடலே..!

ஒருவன் எதுவாக ஆக விரும்புகிறானோ
அதை தீர்மாணிப்பதும் உடலே...!

ஒருவன் உண்ணும் உணவும் பேணி காக்கும் உடலும் அழைத்து செல்லும் அதன் அதன் தன்மைக்கு ஏற்ப..!

ஒருவன் அவன் உள் குடும்பமான உடலை கவனித்தால்..!

அந்த உள் குடும்பமே உன் வெளி குடும்பத்தை காக்கும்..!

பிறந்த ஒவ்வொருவருக்கும் அவரவர் குலத்தின் குலதெய்வம் அவரின் உடலே..!

உலகின் அனைத்து ரகசியமும் உன் உடலுக்கு உள்ளே..!

தியானம் நம் மனதோடு பேச செய்யும்.

ஆசனம் நம் உடலோடு பேச செய்யும்.

அதை தேடு...!!

இந்த தத்துவத்தை திருமூலர் தன்னுடைய திருமந்திரத்தில் தெள்ளத்தெளிவாக சொல்லுகிறார்...

        "தன் உடலை காக்காதவன் புழுவாய் புழு புழுத்து இறப்பார்" என்று கூறியுள்ளார்...

அபிராமி அந்தாதி பாடல் 3

"அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே, திருவே! வெருவிப்
பிறந்தேன் நின்அன்பர் பெருமைஎண்ணாதகரும நெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே".

                   அபிராமி அந்தாதி பாடல் 3

 உவமையோடு சற்று வார்த்தை ஜாலங்கள் மூலம் மறைத்து நமக்கென முன்னோர்கள் வெளிப்படுத்தியுள்ள மறைமொழிகளை நான் உணர்ந்து கொண்டேன்.
குருவாக இருந்து என்னை வழிநடத்தும் அன்னை அபிராமியே இது உன் அருளால் தான் நடந்தது .எமக்கு இந்த கல்வியை வழங்கிய.உனது திருவடியை போற்றுகிறேன் தாயே.

 தனது அறியாமையால் பிறந்து பல்வேறு துன்பங்களை தனக்கே உரிய துன்பங்களாக எண்ணி தன் தலையை கொடுத்து நரக வேதனை அடைந்து வரும் பாவிகளும் சற்றேனும் அறச்செயல்களில் ஈடுபட்டு நீ தரும் இன்பமெனும் அருட்பார்வைக்கு உரியவர் ஆனால் அம்மனிதருக்கு என்றென்றும், எங்கெங்கும், எல்லா பொழுதுகளும் ஆனந்தமே! அபிராமித் தாயே!

சிவா

புதன், 19 பிப்ரவரி, 2025

அபிராமி அந்தாதி

"துணையும் தொழும் தெய்வமும், பெற்றதாயும் சுருதிகளின்
பணையும், கொழுந்தும் பதி கொண்டவேரும் பனிமலர்பூங்
கணையும், கருப்புச்சிலையும், மென்பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே".
                     (அபிராமி அந்தாதி பாடல் 2)

    
 தாய் அபிராமியே உலகனைத்துக்கும் மூலாதாரமாக விளங்குகிறாள்.

தொழுது துணை வேண்டுபவருக்கு  எங்கும் எப்போதும் துணையாக இருப்பாள் அன்னை.

 அன்னையின் இசைவை இசைந்து இருப்பவர்களுக்கு ஏராளமான வரம் அருளுவாள் அன்னை அபிராமி.

 பேரன்பும், கண்களில் பெருங்கருணையும் கொண்டவள் தான் அதேசமயம் அவள் பாசத்திற்கு அங்குசமும் உண்டு என்பதை புரிந்து பிற மனிதர்களுக்கு துன்பங்கள் ஏற்படுத்தும் செயல்களை தவிர்த்து விடுங்கள்.அன்பையே வழங்கும் அன்னையின் கண்டிப்பும் மிகுந்த வலி ஏற்படுத்தும்.

                                                         சிவா

செவ்வாய், 18 பிப்ரவரி, 2025

அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி பாடல் .1

"உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே".
                                         அபிராமி பட்டர்.

 சூரிய சந்திர அக்கினி கலைகளை உணர்ந்தவர்கள் தான் மாதுளம் பழத்தின் முத்துக்களைப் போன்ற மானிக்க மாலையென உன்னை போற்றுவார்கள்.மின்னொளியாக ஜொலித்து குங்குமம் போன்று விளங்கும் எமது அன்னை அபிராமியே எனது உடம்பை காக்கின்றாள், என் விழிகளில் வந்து தங்கி எனது வழித்துணையாகவும்  விளங்குகிறாள்.

                                                       சிவா

திங்கள், 3 பிப்ரவரி, 2025

திருமூலர் திருமந்திரம்

திருமந்திரம் 

"எய்திய நாளில் இளமை கழியாமை 

எய்தியநாளில்இசையினால் ஏத்துமின்

எய்திய நாளில் எறிவது அறியாமல் 

எய்திய நாளில் இருந்து கண்டேனே !"

விளக்கவுரை :
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது அந்த பிறப்பிலும் இளமைக்காலம் மிக அரிது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.கிழப்பருவம் எய்தியவுடன் இறைவனைத் தேடலாம் என்று தினவெடுத்து நின்றால் முடிவில் ஏக்கம் மட்டுமே மிஞ்சும்.
 
இளமைக் காலமே இறைவனைத் தேடியடைய இசைவான காலம்.

திரு விவிலியம் கூட இதை இவ்வாறு கூறுகின்றது : உன் வாலிபப் பிராயத்திலேயே உன் சிருஷ்டிகரை நினை என்று.

 நீங்கள் ஏற்றுக் கொண்டு வந்து இங்கு வாழ்ந்து வருகின்ற இந்த மானிடப் பிறப்பில்  உங்கள் உடலில் இளமை குடிகொண்டிருக்கும் போதே !இறைவனைப் பற்றிக் கொள்ளுங்கள் என்று விழிப்பூட்கிறேன்.

விழிப்பூட்டை திறந்து கொள்ளுங்கள் உங்கள் ஆசான் மூலமாக!

இறை உணர்வோடு நீங்கள் வாழ்வதற்கு தடையாய்  எவையெல்லாம் இருக்கிறதோ அவற்றை எல்லாம் தூர எட்டி வீசுங்கள். மன மயக்கத்தை நீக்கிக் கொள்ளுங்கள் . 

யானும் எனது இளமை காலத்திலேயே பரமனோடு ஒன்றிடவும் மனம் பக்குவ நிலையை எய்திடவும் தடைகளாக இருந்த மன மாசுக்களை நீக்கிக் கொண்டேன்.பரமானந்த நிலை பெற்றேன்.இறையொளியோடு கூடி கலந்தேன்.

குருநாதர்களுக்கு எல்லாம் குருநாதர் திருமூலர் நமக்கு வாக்கு தருகிறார்.

திருச்சிற்றம்பலம்.

காகபுஜண்டர் ஞானம் பாடல் 15

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 15 பாடல் : முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது   மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும் சத்தியடா மனந்தானே யேக மாகத் ...