தாயுமானவர் பராபரக்கண்ணி பாடல் விளக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாயுமானவர் பராபரக்கண்ணி பாடல் விளக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 21 டிசம்பர், 2025

தாயுமானவர் பராபரக்கண்ணி பாடல் விளக்கம் முதல் பகுதி

தாயுமானவர் அருளிய
“பராபரக்கண்ணி”  

விளக்கவுரை: சி எஸ் சிவா 

1. பாடல்
சீராருந் தெய்வத் திருவருளாம் பூமிமுதல்
பாராதி யாண்ட பதியே பராபரமே.

உரை:
அழகும் ஒழுங்கும் நிறைந்த தெய்வீக அருளாக, பூமி முதலான உலகங்களையும், மேலுலகங்களையும் ஆளும் ஆண்டவனே! பராபரமே!.

2. பாடல்
கண்ணாரக் கண்டோர் கருப்பொருள்காணாமலருள்
விண்ணூ டிருந்த இன்ப வெற்பே பராபரமே.

உரை:
கண்களால் காண முயன்றாலும், உணர்வுகளால் மட்டுமே அறியக்கூடிய உள் பொருளாக இருப்பவனே! ஆகாயத்திலும் அதற்கு அப்பாற்பட்ட நிலையிலும் நிலைக்கும் ஆனந்த மலை போன்ற பரம்பொருளே! பராபரமே!

3. பாடல்
சிந்தித்த எல்லாமென் சிந்தையறிந்தேயுதவ
வந்த கருணை மழையே பராபரமே.

உரை:
நான் எண்ணும் ஒவ்வொரு எண்ணத்தையும் முன்பே அறிந்து, தேவையான உதவியை அளிக்கத் தானே வந்து பொழியும் கருணை மழையே! பராபரமே!.

4. பாடல்
ஆரா அமுதே அரசே ஆனந்தவெள்ளப்
பேராறே இன்பப் பெருக்கே பராபரமே.

உரை:
எவ்வளவு சுவைத்தாலும் தீராத அமுதே! எல்லாவற்றுக்கும் அரசனாய் இருந்து, ஆனந்தம் பெருகிப் பாயும் பேராறாக விளங்கும் பராபரமே!.

5. பாடல்
ஆரறிவார் என்ன அனந்தமறை ஓலமிடும்
பேரறிவே இன்பப் பெருக்கே பராபரமே.

உரை:
“இது யார்? என்ன?” என்று முடிவில்லாத வேதங்களே முழங்கிக் கேட்கும் அளவுக்கு அளவிட முடியாத பேரறிவாய் விளங்கும் ஆனந்தப் பெருக்கே பராபரமே!.

6. பாடல்
உரையிறந்த அன்பருளத் தோங்கொளியா யோங்கிக்
கரையிறந்த இன்பக் கடலே பராபரமே.

உரை:
சொற்களால் விவரிக்க முடியாத அன்பும் அருளும் கொண்டு, எல்லையற்ற ஒளியாய் உயர்ந்து நிற்கும் கரையற்ற ஆனந்தக் கடலே பராபரமே!.

7. பாடல்
எத்திக்குந் தானாகி என்னிதயத் தேயூறித்
தித்திக்கும் ஆனந்தத் தேவே பராபரமே.

உரை:
எல்லாத் திசைகளிலும் நீயே ஆகி நிறைந்து, என் இதயத்திற்குள் ஊறி, இனிமையாக அனுபவிக்கப்படும் ஆனந்த தெய்வமே! பராபரமே!.

8. பாடல்
திக்கொடுகீழ் மேலுந் திருவருளாம் பொற்பறிந்தோர்
கைக்குள்வளர் நெல்லிக் கனியே பராபரமே.

உரை:
எட்டு திசைகளிலும், கீழும் மேலும் திருவருளாய் விளங்கும் உன்னை உணர்ந்த ஞானிகளின் உள்ளங்கைகளில் வளர்ந்த நெல்லிக்கனி போன்று விளங்கும் பராபரமே!.

9. பாடல்
முத்தே பவளமே மொய்த்தபசும் பொற்சுடரே
சித்தேஎன் னுள்ளத் தெளிவே பராபரமே.

உரை:
முத்தாகவும், பவளமாகவும், பசும் பொன் ஒளியாகவும் விளங்கி, என் மனத்தின் குழப்பங்களை அகற்றி தெளிவளிக்கும் சுத்த சித்தமாக இருப்பவனே பராபரமே!.

10. பாடல்
கண்ணே கருத்தேயென் கற்பகமே கண்ணிறைந்த
விண்ணே ஆனந்த வியப்பே பராபரமே.

உரை:
என் கண்களாகவும், என் சிந்தனையாகவும், வேண்டியதை அருளும் கற்பக விருட்சமாகவும் இருந்து, கண் நிறைய ஆனந்த வியப்பை தரும் ஆகாயம் போன்ற பராபரமே!.

11.பாடல்
வாக்காய் மனதாய் மனவாக் கிறந்தவர்பால்
தாக்காதே தாக்குந் தனியே பராபரமே.

உரை:
வாக்கு, மனம், அவற்றின் எல்லைகளையும் கடந்த ஞானிகளிடம், நீ அவர்களால் “அடைய” முடியாதவனாய் இருந்தும், கருணையால் அவர்களையே வந்து “அடைந்து” விடுபவனாய் நிற்கிறாய். முயற்சியால் அல்ல; அருளால் நம்மைத் தொடும் தனிப் பராபரமே.

12.பாடல்
 பார்த்தஇட மெல்லாம் பரவெளியாய்த் தோன்றவொரு
வார்த்தைசொல்ல வந்த மனுவே பராபரமே.

உரை:
எங்கு பார்த்தாலும் பரவெளியாகத் தோன்றும் உண்மையை, மனிதருக்குப் புரியச் சொல்ல வந்த குருவே பராபரமே!.

13.பாடல்
 வானந்த மண்ணினந்தம் வைத்துவைத்துப் பார்க்கஎனக்கு
ஆனந்தம் தந்த அரசே பராபரமே.

உரை:
வானும் மண்ணும், உயர்வும் தாழ்வும் என்று எல்லாவற்றையும் ஒப்பிட்டு உணரச் செய்து, அதற்கும் அப்பால் நிற்கும் ஆனந்தத்தைத் தந்த அரசன் நீ. வேறுபாடுகள் மூலமாகவே ஒருமையின் இன்பத்தை உணர்த்தினாய் பராபரமே!.

14.பாடல்
 அன்பைப் பெருக்கிஎன தாருயிரைக் காக்கவந்த
இன்பப் பெருக்கே இறையே பராபரமே.

உரை:
என் உள்ளத்தில் அன்பை வளர்த்து, என் உயிரைக் காக்க வந்த இன்பத்தின் பெருக்கே பராபரமே!.

15.பாடல்
 வான்மெல் லாங்கொண்ட மௌனமணிப் பெட்டகத்துக்
கானபணி யான அணியே பராபரமே.

உரை:
வானத்தையும் மேலாகக் கொண்ட மௌனமே உன் மணிப்பெட்டகம். அதில் ஒளிரும் அணியாக நீ நிற்கிறாய். பராபரமே!.

16.. பாடல் 
ஓடும் இருநிதியும் ஒன்றாகக் கண்டவர்கள்
நாடும் பொருளான நட்பே பராபரமே.

உரை:
ஓடிக் கொண்டிருக்கும் இரு நிதிகள்—உலக இன்பமும் ஆன்ம இன்பமும்—இரண்டும் ஒன்றே எனக் கண்ட ஞானிகள் நாடும் உண்மையான நட்பு நீ. பராபரமே!.

17. பாடல் 
சித்த நினைவுஞ் செயுஞ்செயலும் நீயெனவாழ்
உத்தமர்கட் கான உறவே பராபரமே.

உரை:
நினைவும் செயலும் எல்லாமே நீயே என்று வாழும் உத்தமர்களுக்கு, நீ உறவாய் நிற்கிறாய். பராபரமே!.

18.பாடல்
போதாந்தப் புண்ணியர்கள் போற்றிசய போற்றியெனும்
வேதாந்த வீட்டில் விளக்கே பராபரமே.

உரை:
வேதங்களும் அதைப் போதிப்பவர்கள் நாவும் உன்னையே போற்றுகிறது. ஒளியுடைய பராபரமே!.

19.பாடல்
முத்தாந்த வீதி முளரிதொழும் அன்பருக்கே
சித்தாந்த வீதிவருந் தேவே பராபரமே.

உரை:
பரமாக உன்னை உணர்ந்த உனது அன்பர்களை ஆயிரம் இதழ் தாமைரையில் அமரவைத்து வழிநடத்தி வருகிறாய் தேவனே பராபரமே!.

20.பாடல்
ஈனந் தருமுடலம் என்னதுயான் என்பதற
ஆனந்தம் வேண்டி அலந்தேன் பராபரமே.

உரை:
இந்த தாழ்ந்த உடல் ‘நான்’ என்றும் ‘என்னது’ என்றும் எண்ணும் மாயையை அறுத்து, ஆனந்தம் வேண்டி நான் தவிக்கிறேன் பராபரமே!.

பாடல் 21
என்புருகி நெஞ்சம் இளகிக் கரைந்துகரைந்து
அன்புருவாய் நிற்க அலந்தேன் பராபரமே.

உரை:
இறுகிய எனது மனம் இளகி உருகிக் கரைந்து அன்பு நிறைந்த மனம் உள்ளவனாக நிற்க வழி தேடி தவிக்கிறேன் பராபரமே!.

பாடல் 22
சுத்த அறிவாய்ச் சுகம்பொருந்தின் அல்லால்என்
சித்தந் தெளியாதேன் செய்வேன் பராபரமே.

உரை:
நீ தூய அறிவாகவும், ஆனந்தமாகவும் வந்து கலக்காவிட்டால்என் மன மயக்கம் நீங்காது.என்ன செய்வேன் பராபரமே!.

பாடல் 23
மாறா அனுபூதி வாய்க்கின் அல்லால் என்மயக்கம்
தேறாதென் செய்வேன் சிவமே பராபரமே.

உரை:
மாறாத ஆன்ம அனுபவம் (ஞானம்) கிடைக்காவிட்டால் என் மயக்கம் நீங்காது. தேறுவதற்கு நான் என்ன செய்வேன் பராபரமே!.

பாடல் 24
தாகமறிந் தின்பநிட்டை தாராயேல் ஆகெடுவேன்
தேகம் விழுந்திடின்என் செய்வேன் பராபரமே.

விளக்கம்:
என் ஆன்ம தாகத்தை அறிந்து,
ஆனந்த நிஷ்டை  தராவிட்டால் கெட்டு விடுவேன். உடல் விழுந்து விட்டது என்றால்  நானென்ன செய்வேன் பராபரமே!.

பாடல் 25
அப்பாஎன் எய்ப்பில் வைப்பே ஆற்றுகிலேன்போற்றிஎன்று
செப்புவதல் லால்வேறென் செய்வேன் பராபரமே.

உரை:
அப்பா என் ஒடுக்க நிலையில் நீயே ஆதாரமாக இருக்கிறாய்.உன்னைப் “போற்றி” என்று புகழ்ந்து பாடுவதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கு எனக்கில்லை.பராபரமே!.

பாடல் 26
உற்றறியும் என்னறிவும் உட்கருவி போற்சவிமாண்
டற்றும்இன்பந் தந்திலையே ஐயா பராபரமே.

விளக்கம்:
ஐம்புலன்கள், அறிவு , ஞானேந்திரியக் கருவிகள் காரணங்கள் என எதனாலும் எனக்கு உண்மையான ஆனந்தத்தைத் தர இயலவில்லை.நீயும் பாராமுகமாக இருக்கிறாயே பராபரமே,!.


பாடல் 27
சொல்லால் அடங்காச் சுகக்கடலில் வாய்மடுக்கின்
அல்லால்என் தாகம் அறுமோ பராபரமே.

விளக்கம்:
வார்த்தைகளால் விவரிக்க முடியாத
ஆனந்தக் கடலில் மூழ்கினால்தான்
என் தாகம் தீரும்.
இங்கு மௌன அனுபவம் முக்கியம்.


பாடல் 28

பாராயோ என்னைமுகம் பார்த்தொருகால் என்கவலை
தீராயோ வாய்திறந்து செப்பாய் பராபரமே.

விளக்கம்:
ஒருமுறை கருணையுடன் என்னைப் பார்த்து
என் துன்பத்தை தீர்த்து
உன் அருள் வார்த்தையால் என்னை தெளிவுபடுத்து.
இது குருவின் அருள் பார்வை வேண்டுதல்.

பாடல் 29

ஓயாதோ என்கவலை உள்ளேஆ னந்த வெள்ளம்
பாயாதோ ஐயா பகராய் பராபரமே.

விளக்கம்:
என் கவலை ஓய்ந்து
உள்ளத்தில் ஆனந்த வெள்ளம் பெருக்கெடுக்க
உன் அருளை அளி.
இது அக ஆனந்த அனுபவம்.


பாடல் 30

ஓகோ உனைப்பிரிந்தார் உள்ளங் கனலில்வைத்த
பாகோ மெழுகோ பகராய் பராபரமே.

விளக்கம்:
உன்னை உணராதவர் உள்ளம்
நெருப்பிலா? மெழுகா?
அது எரிகிறதா? உருகுகிறதா?
உன்னை அறியாத வாழ்க்கை
துன்பமும் நிலையற்றதும்தான் என்பதைச் சொல்கிறது.

31.
பாடல்:
கூர்த்தஅறி வத்தனையுங் கொள்ளைகொடுத் துன்னருளைப்
பார்த்தவன்நான் என்னைமுகம் பாராய் பராபரமே.

விளக்கம்:
எனக்குக் கிடைத்த கூர்மையான அறிவும் திறனும் அனைத்தும் உன் அருளால் வந்தவை.
ஆனால் அவற்றால் உன்னை உண்மையில் கண்டவன் போல நான் வெளியில் நடிப்பது தவறு.
என் அந்த அகந்தை கலந்த முகத்தையும் நீ பார்த்தருள வேண்டும்; அதையே திருத்தும் அருளும் நீயே.

32.

பாடல்:
கடலமுதே தேனேயென் கண்ணே கவலை
படமுடியா தென்னைமுகம் பார்நீ பராபரமே.

விளக்கம்:
நீ கடல் போன்ற அமுதம்; தேன் போன்ற இனிமை; எனக்கு கண் போல அத்தியாவசியமானவன்.
என் கவலைக்கு முடிவே இல்லை;
அந்த நிலையில் கூட என்னை விட்டு விலகாமல் என் முகத்தை நீ கருணையுடன் நோக்க வேண்டும்.

33.
பாடல்:
உள்ளம் அறிவாய் உழப்பறிவாய் நான்ஏழை
தள்ளிவிடின் மெத்தத் தவிப்பேன் பராபரமே.

விளக்கம்:
என் உள்ளத்தின் நிலையும் அறிவின் எல்லையும் நீ அறிவாய்.
நான் சிறியவன்; ஆதரவில்லாதவன்.
நீ என்னைத் தள்ளிவிட்டால், நான் மிகுந்த துன்பத்தில் மூழ்கிவிடுவேன்.


34.
பாடல்:
கன்றினுக்குச் சேதா கனிந்திரங்கல் போலஎனக்
கென்றிரங்கு வாய்கருணை எந்தாய் பராபரமே.

விளக்கம்:
கன்றின் அழைப்பைக் கேட்டு தாய் மாடு தானாகவே உருகுவது போல,
எனக்கும் நீ இயல்பாகவே இரங்கி அருள வேண்டும்.
கருணை உன்னிடம் கேட்க வேண்டியதல்ல; அது உன் இயல்பு.


35.
பாடல்:
எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணிஎண்ணி ஏழைநெஞ்சம்
புண்ணாகச் செய்ததினிப் போதும் பராபரமே.

விளக்கம்:
தேவையற்ற எண்ணங்களை மீண்டும் மீண்டும் சிந்தித்து,
என் ஏழை மனத்தை நான் தான் காயப்படுத்திக் கொண்டேன்.
இனி இந்த மனவலியை நிறுத்த வேண்டும்.


36.
பாடல்:
ஆழித் துரும்பெனவே அங்குமிங்கும் உன்னடிமை
பாழில் திரிவதென்ன பாவம் பராபரமே.

விளக்கம்:
கடலில் மிதக்கும் துரும்பைப் போல,
ஒருமுகம் இன்றி அங்கும் இங்கும் உன் அடிமையாகச் சிதறித் திரிகிறேன்.
இந்த வீண் அலைச்சல் பாவமல்லவா?

37.
பாடல்:
கற்றஅறி வால்உனைநான் கண்டவன்போற் கூத்தாடில்
குற்றமென்றென் நெஞ்சே கொதிக்கும் பராபரமே.

விளக்கம்:
புத்தக அறிவால் உன்னை உணர்ந்தவன் போல நடித்து,
வெறும் வெளிப்புற வேடம் போட்டால்,
அது தவறு என்று என் மனமே உள்ளிருந்து எரிகிறது.

38.
பாடல்:
ஐயோ உனைக்காண்பான் ஆசைகொண்ட தத்தனையும்
பொய்யோ வெளியாப் புகலாய் பராபரமே.

விளக்கம்:
உன்னை காண வேண்டும் என்ற என் ஆசையும் கூட
பொய்யான ஒன்றாகிவிடுமோ?
அல்லது அது உண்மையாக வெளிப்பட்டு,
உன்னை அடையும் வழியாக மாறுமோ?

39.
பாடல்:
துன்பக்கண் ணீரில் துளைந்தேற்குன் ஆனந்த
இன்பக்கண் ணீர்வருவ தெந்தாள் பராபரமே.

விளக்கம்:
துன்பத்தின் கண்ணீரில் நான் மூழ்கியிருக்கிறேன்.
உன் அருளால் பிறக்கும் ஆனந்தக் கண்ணீர்
எப்போது எனக்கு வரும்?

40.
பாடல்:
வஞ்சனையும் பொய்யும்உள்ளே வைத்தழுக்கா றாயுளறும்
நெஞ்சனுக்கும் உண்டோ நெறிதான் பராபரமே.

விளக்கம்:
உள்ளத்தில் வஞ்சனையும் பொய்யும் வைத்துக்கொண்டு,
பொறாமையால் எரியும் மனிதனுக்கு
உண்மையான நெறி இருக்குமா?
இது பிறரைச் சாடுதல் அல்ல; தன்னைத் தானே விசாரிக்கும் நேர்மை.

பாடல் 41.
பாசம்போய் நின்றவர்போற் பாராட்டி யானாலும்
மோசம்போ னேன்நான் முறையோ பராபரமே.

விளக்கம்:
வெளியில் ஆசை நீங்கிய ஞானிபோல் பேசினாலும், உள்ளே மோகம் மறையவில்லை. தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்ட இந்த நிலை முறையா என்று இறைவனை நோக்கி வருந்தல்.

பாடல் 42.
நன்றறியேன் தீதறியேன் நானென்று நின்றவனார்
என்றறியேன் நான்ஏழை என்னே பராபரமே.

விளக்கம்:
நன்மை–தீமை எதையும் உணராத ‘நான்’ என்ற அகந்தை. தன்னை அறியாத அறியாமையே என் வறுமை என உணர்வு.

பாடல் 43.
இன்றுபுதி தன்றே எளியென் படுந்துயரம்
ஒன்றும்அறி யாயோ உரையாய் பராபரமே.

விளக்கம்:
இது இன்று வந்த துன்பமல்ல; பழையதே. என் எளிய நிலையை நீ அறியாதாயோ? கருணையுடன் பேசுவாயா என்ற வேண்டுதல்.

பாடல் 44.
எத்தனைதான் சன்மமெடுத் தெத்தனைநான் பட்டதுயர்
அத்தனையும் நீயறிந்த தன்றோ பராபரமே.

விளக்கம்:
எத்தனை பிறவிகள், எத்தனை துன்பங்கள்—அத்தனையும் நீ அறிந்ததே. அதனால் அருளில் உறுதியான நம்பிக்கை.

பாடல் 45.
இந்தநாள் சற்றும் இரங்கிலையேற் காலன்வரும்
அந்தநாள் காக்கவல்லார் ஆர்காண் பராபரமே.

விளக்கம்:
இன்றே இரக்கம் இல்லையெனில் மரணம் வரும். அந்த நாளில் என்னைக் காக்க வல்லவர் நீயே என்ற சரணாகதி.

பாடல் 46.
உற்றுற்று நாடி உளம்மருண்ட பாவியைநீ
சற்றிரங்கி ஆளத் தகாதோ பராபரமே.

விளக்கம்:
உலக உறவுகளைத் தேடி மனம் மயங்கிய என்னைச் சற்றே இரங்கி ஏற்றுக் கொள்ள முடியாதா?—கருணை வேண்டுதல்.


பாடல் 47.
எள்ளளவும் நின்னைவிட இல்லா எனைமயக்கில்
தள்ளுதலால் என்னபலன் சாற்றாய் பராபரமே.

விளக்கம்:
உன்னைத் தவிர எனக்கு வேறு ஆதாரம் இல்லை. இருந்தும் மயக்கத்தில் தள்ளினால் பயன் என்ன?—அருள் இன்றியமையாதது.

பாடல் 48.
பாடிப் படித்துலகிற் பாராட்டி நிற்பதற்கோ
தேடி யெனையடிமை சேர்த்தாய் பராபரமே.

விளக்கம்:
உலகப் புகழுக்காக அல்ல; உன் சேவகனாக இணைக்கவே என்னை அழைத்தாய். புகழ் அல்ல, பக்தியே இலக்கு.

பாடல் 49.
சொன்னதைச் சொல்வதல்லாற் சொல்லறவென் சொல்லிறுதிக்
கென்னததைச் சொல்வேன் எளியேன் பராபரமே.

விளக்கம்:
கற்றதை மீண்டும் சொல்லுவதற்கே என் சொல் முடிகிறது. மொழியின் எல்லையை உணரும் தாழ்மை.


பாடல் 50.
சொல்லும் பொருளும்அற்றுச் சும்மா இருப்பதற்கே
அல்லும் பகலுமெனக் காசை பராபரமே.

விளக்கம்:
சொல்–பொருள் இரண்டும் கரைந்து, மௌனமாக ‘சும்மா இருப்பது’—அதுவே உயர்ந்த நிலை. அந்த நிலைக்கான தீவிர வேட்கை.

பாடல் 51.
“நேச நிருவிகற்ப நிட்டையல்லால் உன்னடிமைக்
காசையுண்டோ நீயறியா தன்றே பராபரமே.”

விளக்கம்:
எந்த விருப்ப–வெறுப்பும் அற்ற, சுத்தமான நிருவிகற்ப சமாதி நிலைதான் உன் உண்மை அடிமைத்தனம். அதைவிட வேறு எந்த ஆசையும் எனக்கில்லை. இந்த உண்மையை நீயே அறியாததாக இருக்க முடியுமா, பராபரமே?
→ ஞானத்தின் உச்சநிலையே இறைசேவையாகக் காணப்படுகிறது.

பாடல் 52.
“துச்சனென வேண்டாஇத் தொல்லுலகில் அல்லல்கண்டால்
அச்சம் மிகவுடையேன் ஐயா பராபரமே.”

விளக்கம்:
இந்த பழைய உலகின் துன்பங்களைப் பார்க்கும்போது, என்னை தாழ்ந்தவன் என்று நினைக்க வேண்டாம். நான் பயம் கொண்டவனாகி விட்டேன், ஐயனே.

பாடல் 53.
“கண்ணாவா ரேனும்உனைக் கைகுவியா ராயின் அந்த
மண்ணாவார் நட்பை மதியேன் பராபரமே.”

விளக்கம்:
எவ்வளவு அறிவாளிகளாக இருந்தாலும், உன்னை வணங்காதவர்களின் நட்பை நான் மதிக்க மாட்டேன்.

பாடல் 54.
“கொல்லா விரதங் குவலயமெல் லாம்ஓங்க
எல்லார்க்குஞ் சொல்லுவதென் இச்சை பராபரமே.”

விளக்கம்:
அஹிம்சை எனும் கொல்லா விரதம் உலகமெங்கும் உயர வேண்டும். இதை அனைவருக்கும் சொல்ல வேண்டும் என்பதே என் விருப்பம்.

உயர்ந்த ஆன்மீகத்தின் அடையாளமாக கருணை வலியுறுத்தப்படுகிறது.

பாடல் 55.
“எத்தாற் பிழைப்பேனோ எந்தையே நின்னருட்கே
பித்தானேன் மெத்தவுநான் பேதை பராபரமே.”

விளக்கம்:
உன் அருளைத் தவிர வேறு ஆதாரம் எனக்கு இல்லை. அதனால் பித்துப்பிடித்தவனைப் போல ஆனேன்; நான் உண்மையில் அறியாமை உடையவன்.

பாடல் 56.
“வாயினாற் பேசா மவுனத்தை வைத்திருந்துந்
தாயிலார் போல்நான் தளர்ந்தேன் பராபரமே.”

விளக்கம்:
வாயால் பேசாமல் மௌனத்தை காத்திருந்தாலும், தாயில்லாத பிள்ளைபோல் மனம் தளர்ந்தேன்.

வெளிப்புற மௌனம் போதாது; உள்ளார்ந்த அருள் தேவை.

பாடல் 57.
“அன்னையிலாச் சேய்போல் அலக்கணுற்றேன் கண்ணார
என்னகத்தில் தாய்போல் இருக்கும் பராபரமே.”

விளக்கம்:
தாயில்லா குழந்தைபோல் நான் துன்புற்றாலும், என் உள்ளத்தில் தாய்போல் இருந்து காக்கும் பராபரமே.

 இறைவனை தாயாகக் காணும் பரிபக்குவ பக்தி.

பாடல் 58.
“உற்றுநினைக் கில்துயரம் உள்ளுள்ளே செந்தீயாய்ப்
பற்றநொந்தேன் என்னைமுகம் பார்நீ பராபரமே.”

விளக்கம்:
உன்னை நினைக்காமல் இருந்தால் துன்பம் உள்ளே தீப்போல் எரிகிறது. அதனால் நான் நொந்தேன்; என் நிலையை நீ பார்த்தருள வேண்டும்.

பாடல் 59.
“பொய்யன் இவன் என்றுமெள்ளப் போதிப்பார் சொற்கேட்டுக்
கைவிடவும் வேண்டாமென் கண்ணே பராபரமே.”

விளக்கம்:
“இவன் பொய்யன்” என்று சிலர் சொன்னாலும், அவர்களின் வார்த்தைகளை நம்பி என்னை கைவிடாதே, என் கண்ணே.

உலகினர் அபிப்பிராயத்தை விட இறை அருளே முக்கியம்.

பாடல் 60.

“எண்ண மறிந்தே இளைப்பறிந்தே ஏழைஉய்யும்
வண்ணந் திருக்கருணை வையாய் பராபரமே.”

விளக்கம்:
என் எண்ணங்களையும் சோர்வையும் அறிந்த நீ, இந்த ஏழை உய்யும்படி உன் அருளை நிலைநாட்டுவாயாக.

பாடல் 61.
நாட்டாதே யென்னையொன்றில் நாட்டி யிதமகிதங்
காட்டாதே யெல்லாம்நீ கண்டாய் பராபரமே.

உரைநடை விளக்கம்:
என்னை ஒரு குறிப்பிட்ட ஆசை, கருத்து, பற்று ஆகிய ஒன்றிலே மட்டும் கட்டிவிடாதே.
இன்ப–துன்பம் எனும் மயக்கத்தை காட்டி ஏமாற்றவும் வேண்டாம்.
எல்லாவற்றையும் அறிந்துள்ள பராபரமே, நீயே உண்மை என்பதை நான் அறிவேன்.

பாடல் 62.
உன்னைநினைந் துன்நிறைவின் உள்ளே உலாவும்என்னை
அன்னைவயிற் றின்னம்அடைக் காதே பராபரமே.

உரைநடை விளக்கம்:
உன்னை நினைத்து, உன் பரிபூரண நிலையிலேயே சுற்றி உலாவும் என்னை
மீண்டும் பிறவி என்னும் தாயின் கருவில் அடைத்துவிடாதே.
பிறவிச்சுழலிலிருந்து விடுதலை தரவேண்டும்.

பாடல் 63.
பரமுனக்கென் றெண்ணும் பழக்கமே மாறா
வரமெனக்குத் தந்தருள்என் வாழ்வே பராபரமே.

உரைநடை விளக்கம்:
“எல்லாமே உனக்கே” என்று எண்ணும் பழக்கம் எப்போதும் மாறாமல்
எனக்கு நிலையான வரமாகத் தந்தருள வேண்டும்.
அதுவே என் வாழ்க்கையின் உண்மை அர்த்தம்.

பாடல் 64.
வந்தித்து நின்னை மறவாக் கடனாகச்
சிந்திக்க நின்னதருள் செய்யாப் பராபரமே.

உரைநடை விளக்கம்:
உன்னை வணங்குவதையும் நினைப்பதையும்
ஒரு மறக்கமுடியாத கடமையாக என் உள்ளத்தில் நிலைநிறுத்த
உன் அருளை அளிக்க வேண்டும்.

பாடல் 65.
எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி யிரங்கவும்நின்
தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே.

உரைநடை விளக்கம்:
எல்லா உயிர்களையும் என் உயிரைப் போலவே கருதி
அவர்கள்மேல் கருணையுடன் இரங்கும் மனப்பான்மை
உன் தெய்வீக அருளால் எனக்குப் பிறக்க வேண்டும்.

பாடல் 66.
வெட்டவெளிப் பேதையன்யான் வேறுகப டொன்றறியேன்
சிட்டருடன் சேர்அனந்த தெண்டன் பராபரமே.

உரைநடை விளக்கம்:
நான் பரந்த வெளி போன்ற எளிய அறிவுடையவன்;
வேறு கபடங்களோ சூழ்ச்சிகளோ அறியாதவன்.
சித்தர்களுடன் சேர்ந்து ஆனந்த நிலையில் இருக்க அருள் புரிய வேண்டும்.

பாடல் 67.
இரவுபக லற்றவிடத் தேகாந்த யோகம்
வரவுந் திருக்கருணை வையாய் பராபரமே.

உரைநடை விளக்கம்:
இரவு–பகல் என்ற வேறுபாடு அற்ற இடத்தில்
தனிமைச் சாந்தியான யோக அனுபவம்
எனக்குள் தோன்ற உன் கருணையை நிலைநிறுத்து.

பாடல் 68.
மால்காட்டிச் சிந்தை மயங்காமல் நின்றுசுகக்
கால்காட்டி வாங்காதே கண்டாய் பராபரமே.

உரைநடை விளக்கம்:
உலக இன்பங்களை காட்டி என் சிந்தையை மயக்காமல்,
சுகம் தருவதாகக் காட்டி என்னை மீண்டும் இழுத்துச் செல்லாதே.
நிலையான ஞான நிலையிலேயே என்னை நிறுத்து.

பாடல் 69.
எப்பொருளும் நீயெனவே எண்ணிநான் தோன்றாத
வைப்பைஅழி யாநிலையா வையாய் பராபரமே.

உரைநடை விளக்கம்:
எல்லாப் பொருள்களும் நீயே என்று உணர்ந்து
“நான்” என்ற அகந்தை எழாத
அழியாத ஆதார நிலையை எனக்குள் உறுதி செய்.

பாடல் 70.
சும்மா இருப்பதுவே சுட்டற்ற பூரணமென்
றெம்மா லறிதற் கெளிதோ பராபரமே.

உரைநடை விளக்கம்:
எதையும் செய்யாமல், எதையும் பிடிக்காமல்
சும்மா இருப்பதே குறியீடற்ற பூரண நிலை என்று
அதை உணர்வது எங்களுக்கு எவ்வளவு கடினமோ, பராபரமே!

பாடல் 71.
முன்னொடுபின் பக்கம் முடியடிநாப் பண்ணறநின்
தன்னொடுநான் நிற்பதென்றோ சாற்றாய் பராபரமே.

இறைவா! முன்னும் பின்னுமாகப் பரவி, தலை முதல் பாதம் வரை அனைத்திலும் நிறைந்திருக்கும் உன் பரம்பொருள் நிலைமையில், நானும் உன்னோடு ஒன்றாய் நிற்கும் காலம் எப்போது? என்று கேட்கிறேன். எல்லையற்ற உன் நிலைமையில் என் தனித்த உணர்வு கரைந்து ஒன்றாதல் எப்போது?

பாடல் 72.
மைவ்வண்ணந் தீர்ந்த மவுனிசொன்ன தெய்வண்ணம்
அவ்வண்ணம் நிட்டை அருளாய் பராபரமே.

கற்பனைகளின் நிறங்கள் எல்லாம் அகன்று, மௌன ஞானிகள் உணர்ந்த தெய்வ ஒளி எத்தகையதோ, அதே நிலையான தியான அனுபவத்தை எனக்கும் அருள்வாயாக. சொற்களால் சொல்ல முடியாத அந்த உண்மை அனுபவமே வேண்டுமென்கிறார்.

பாடல் 73.
வித்தன்றி யாதும் விளைவதுண்டோ நின்னருளாஞ்
சித்தன்றி யாங்களுண்டோ செப்பாய் பராபரமே.

விதை இல்லாமல் பயிர் விளையாதது போல, உன் அருள் இல்லாமல் எங்களுக்குச் சித்தி (ஞானம்) உண்டாகுமா? எனவே எல்லாவற்றிற்கும் மூலமானது உன் அருளே என்பதை உறுதியாக உணர்த்துகிறார்.

பாடல் 74.
ஆங்கார மற்றுன் அறிவான அன்பருக்கே
தூங்காத தூக்கமது தூக்கும் பராபரமே.

அகங்காரம் இல்லாமல், உன் அறிவாகவே வாழும் அன்பர்களுக்கு, விழிப்புடனே உறங்கும் நிலை (துரியாதீத அனுபவம்) ஏற்படுகிறது. அது சாதாரண தூக்கம் அல்ல; எப்போதும் விழிப்புடன் கூடிய ஆனந்த நிலை.

பாடல் 75.
சிந்தை அவிழ்ந்தவிழ்ந்து சின்மயமா நின்னடிக்கே
வந்தவர்க்கே இன்பநிலை வாய்க்கும் பராபரமே.

மனம் எல்லாக் கட்டுப்பாடுகளிலிருந்தும் தளர்ந்து, சுத்த சின்மயமாக (அறிவின் வடிவாக) உன் திருவடியில் வந்து சேர்ந்தவர்களுக்கே உண்மையான ஆனந்த நிலை கிடைக்கும்.

பாடல் 76.
சொல்லாடா வூமரைப்போற் சொல்லிறந்து நீயாகின்
அல்லால் எனக்குமுத்தி ஆமோ பராபரமே.

நீ சொற்களைத் தாண்டிய மௌனமாகி நிற்கிறாய் என்றால், அந்த மௌன நிலை தவிர எனக்கு முக்தி வேறு வழியில் கிடைக்குமா? அறிவின் எல்லை கடந்த மௌன அனுபவமே முக்தி என்கிறார்.

பாடல் 77.
பேச்சாகா மோனம் பிறவா முளைத்ததென்றற்
காச்சாச்சு மேற்பயனுண் டாமோ பராபரமே.

பேச்சற்ற மௌனம், பிறவியே இல்லாத நிலை என அறிந்தாலும், அந்த நிலை அனுபவமாக மலராவிட்டால் அதனால் பயன் என்ன? அறிவாக மட்டும் அல்ல, அனுபவமாக வேண்டும் என்பதே கருத்து.

பாடல் 78.
கெட்டியென்றுன் அன்பர்மலங் கெட்டயர்ந்தோர் பூரணமாந்
தொட்டிலுக்குட் சேய்போல் துயின்றார் பராபரமே.

உன் அன்பர்கள், உலக மயக்கத்திலிருந்து முற்றிலும் விடுபட்டு, பூரண நிலையை அடைந்து, தாயின் தொட்டிலில் உறங்கும் குழந்தை போல அச்சமற்ற அமைதியில் துயில்கிறார்கள்.

பாடல் 79.
காட்ட அருள்இருக்கக் காணா திருள்மலத்து
நாட்ட மெனக்குவரல் நன்றோ பராபரமே.

நீ அருளை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டிருக்க, அதை காணாமல் அறியாமை எனும் இருளில் என் மனம் அலைவது நியாயமா? என் குறையைத் தானே சுட்டிக்காட்டுகிறார்.

பாடல் 80.
எத்தன்மைக் குற்ற மியற்றிடினுந் தாய்பொறுக்கும்
அத்தன்மை நின்னருளும் அன்றோ பராபரமே.

குழந்தை எவ்வளவு குற்றம் செய்தாலும் தாய் பொறுப்பது போல, நான் எத்தனை குற்றங்கள் செய்தாலும் அவற்றை மன்னிக்கும் கருணையே உன் அருள் அல்லவா? இறுதியில் முழு சரணாகதியை வெளிப்படுத்துகிறார்.

பாடல் 81.
எத்தனையோ தேர்ந்தாலும் என்னாலே இன்பமுண்டோ
சித்துருவே இன்பச் சிவமே பராபரமே.

உரைநடை:
உலகத்தில் எத்தனை வழிகளை ஆராய்ந்து பார்த்தாலும், என் முயற்சியால் உண்மையான இன்பம் கிடைக்குமா? அறிவின் தூய உருவாய், இயல்பாகவே ஆனந்தமாக இருக்கும் சிவனே, உண்மையான இன்பம் நீயே என்பதைக் தாயுமானவர் உணர்த்துகிறார்.

பாடல் 82.
மண்ணொடுவிண் காட்டி மறைந்துமறையா அருளைக்
கண்ணொடுகண் ணாகஎன்று காண்பேன் பராபரமே.

உரைநடை:
பூமியிலும் வானிலும் வெளிப்பட்டு, அதே நேரத்தில் மறைந்தும் நிற்கும் உன் அருளை, என் கண்களால் நேரடியாக எப்போது உணர்ந்து காண்பேன் என்று ஏங்குகிறார்.

பாடல் 83.
பஞ்சரித்து நின்னைப் பலகால் இரந்ததெல்லாம்
அஞ்ச லெனும்பொருட்டே அன்றோ பராபரமே.

உரைநடை:
நான் பலமுறை துன்பத்தில் சிக்கி உன்னை வேண்டியது எல்லாம், நீ “அஞ்சாதே” என்று உறுதியளிக்கவே அல்லவா? இறைவன் அருள் தைரியமாக மாறுவதை இங்கு கூறுகிறார்.

பாடல் 84.
எங்கெங்கே பார்த்தாலும் எவ்வுயிர்க்கும் அவ்வுயிராய்
அங்கங் கிருப்பதுநீ அன்றோ பராபரமே.

உரைநடை:
எங்கு பார்த்தாலும், ஒவ்வொரு உயிரின் உள்ளும் உயிராய் நிற்பது நீயே. இறைவன் அனைத்துயிர்களிலும் ஒரே சாட்சியாக இருப்பதை விளக்குகிறது.

பாடல் 85.
அனைத்துமாய் நின்றாயே யான்வேறோ நின்னை
நினைக்குமா றெங்கே நிகழ்த்தாய் பராபரமே.

உரைநடை:
எல்லாவற்றிலும் நீயே நிற்கும்போது, நான் உன்னிடமிருந்து வேறானவனா? அப்படி இருக்க, உன்னை நினைக்கும் வழியை எங்கே இருந்து தொடங்குவது என்று வியப்புடன் கேட்கிறார்.

பாடல் 86.
நின்போதத் தாலே நினைப்பு மறப்புமென்றால்
என்போதம் எங்கே இயம்பாய் பராபரமே.

உரைநடை:
உன் அறிவால் நினைவும் மறப்பும் நிகழ்ந்தால், என் தனிப்பட்ட அறிவு எங்கே இருக்கிறது? ‘எனது’ என்று சொல்ல ஏதுமில்லை என்பதை உணர்த்துகிறது.

பாடல் 87.
ஒன்றைநினைந் தொன்றைமறந் தோடுமனம் எல்லாம்நீ
என்றறிந்தால் எங்கே இயங்கும் பராபரமே.

உரைநடை:
ஒன்றை நினைத்து, ஒன்றை மறந்து அலைக்கும் மனமே நீயாக இருப்பதை அறிந்தால், மனத்தின் ஓட்டம் எங்கே தொடரும்? மன ஒழிவு (மனநாசம்) நிலையைச் சுட்டுகிறது.

பாடல் 88.
கொழுந்தில் வயிரமெனக் கோதறவுள் ளன்பில்
அழுந்துமவர்க் கேசுகமுண் டாகும் பராபரமே.

உரைநடை:
மென்மையான கொழுந்தில் வைரம் இருப்பது போல, தூய அன்பில் ஆழ்ந்தவர்களுக்கே உண்மையான இன்பம் கிடைக்கும். அன்பே ஞானத்தின் அடையாளம் என்று கூறுகிறார்.

பாடல் 89.
பற்றும் பயிர்க்குப் படர்கொழுந்து போற்பருவம்
பெற்றவர்க்கே நின்னருள்தான் பேறாம் பராபரமே.

உரைநடை:
பயிருக்கு சரியான பருவம் வந்தால் மட்டுமே கொழுந்து படர்வதுபோல், ஆன்மிகப் பக்குவம் பெற்றவர்களுக்கே உன் அருள் முழுமையாக கிடைக்கும்.

பாடல் 90.
யோகியர்க்கே ஞானம் ஒழுங்காம்பே ரன்பான
தாகியரும் யோகம்முன்னே சார்ந்தோர் பராபரமே.

உரைநடை:
யோகியர்க்கு ஞானம் இயல்பாக வரும். ஆனால் அதற்கும் முன், பேரன்பைத் தாகமாக கொண்டவர்கள் யோகத்தை அடைந்தவர்களாகிறார்கள். அன்பே யோகத்திற்கும் ஞானத்திற்கும் அடிப்படை என்று முடிக்கிறார்.

பாடல் 91 .
அல்லும் பகலும் அறிவாகி நின்றவர்க்கே
சொல்லும் பொருளுஞ் சுமைகாண் பராபரமே.

விளக்கம்:
இரவும் பகலும் இடைவிடாது தூய அறிவாக நிலைத்திருப்பவர்களுக்கு,
சொற்களாலும் பொருள்களாலும் பேசுவது கூட ஒரு பாரமாகத் தோன்றும்.
அவர்களுக்கு மௌனமே உண்மை.
அந்த நிலையில், உன்னைப் பற்றி பேசுவதும் கூட தேவையற்றதாகிவிடுகிறது.


பாடல் 92 .
எச்சிலென்று பூவை யிகழ்ந்தோர்க் குனைப்போற்றப்
பச்சிலையுங் கிள்ளப்படும்ோ பராபரமே.

விளக்கம்:
மலரை ‘எச்சில்’ என இகழ்ந்தவர்களிடம்,
பின்னர் அதையே போற்றச் சொன்னாலும்,
பச்சை இலை கூட அவர்கள் கையால் பறிக்கப்படுமா?
அதுபோல, அறியாமையில் உன்னை இகழ்ந்தவர்களுக்கு
பின்னர் உண்மை புரியச் செய்வது எளிதல்ல.

பாடல் 93 .
அந்தக் கரணம் அடங்கத் துறப்பதுவே
எந்தத் துறவினும்நன் றெந்தாய் பராபரமே.

விளக்கம்:
மனம், புத்தி, அகங்காரம் ஆகிய அந்தக்கரணங்கள்
அடங்கிப் போவதே உண்மையான துறவு.
வெளிப்புறத் துறவுகளை விட,
உள்ளுற் துறவுதான் மிகச் சிறந்தது.

பாடல் 94 .
தன்னை அறிந்தால் தலைவன்மேற் பற்றலது
பின்னையொரு பற்றும்உண்டோ பேசாய் பராபரமே.

விளக்கம்:
ஒருவன் தன்னை உண்மையாக அறிந்துவிட்டால்,
அவன் இறைவன் மீது உள்ள பற்று தவிர
வேறு எந்தப் பற்றும் அவனுக்கு இருக்க முடியுமா?
அதுவே முழுமையான விடுதலை.

பாடல் 95 .
அன்பாற் கரைந்துகண்ணீர் ஆறுகண்ட புண்ணியருக்
குன்பால் வரவழிதான் உண்டோ பராபரமே.

விளக்கம்:
அன்பால் கரைந்து, கண்களில் இருந்து கண்ணீர் ஆறாக ஓடிய
அந்த புண்ணிய ஆன்மாக்களுக்கு,
இன்பத்தைத் தேடித் தனியாகச் செல்ல வேண்டிய வழி இருக்கிறதா?
அவர்களிடம் இன்பமே தானாக வந்து சேரும்.


பாடல் 96 .
தன்னை அறிந்தருளே தாரகமா நிற்பதுவே
உன்னை அறிதற் குபாயம் பராபரமே.

விளக்கம்:
தன்னை அறியும் அருளே
வழிகாட்டும் நட்சத்திரம் போல நிலைத்திருப்பதே
உன்னை உணர்வதற்கான உண்மையான வழி.
சுயஅறிவே இறைஅறிவின் வாசல்.

பாடல் 97 .
கற்றகலை யால்நிலைதான் காணுமோ காண்பதெல்லாம்
அற்றவிடத் தேவெளியாம் அன்றோ பராபரமே.

விளக்கம்:
கற்ற கல்விகளால் மட்டும் நிலையான உண்மையை காண முடியுமா?
எல்லாம் விலகி நிற்கும் இடத்தில்தான்
தேவையான பரவெளி வெளிப்படுகிறது.
அறிவு முடியும் இடத்தில்தான் அனுபவம் தொடங்குகிறது.


பாடல் 98.
கண்மூடிக் கண்விழித்துக் காண்பதுண்டோ நின்னருளாம்
விண்மூடின் எல்லாம் வெளியாம் பராபரமே.

விளக்கம்:
கண்களை மூடினாலும் திறந்தாலும்,
உன் அருளை அனுபவிக்க முடியுமா?
ஆனால் மனம் மறைக்கும் மேகம் விலகினால்,
எல்லாமே தெளிவான வெளியாகி விடுகிறது.


பாடல் 99.
நேரே நினதருளென் நெஞ்சைக் கவரின்ஒன்றும்
பாரேன் சுகமும் படைப்பேன் பராபரமே.

விளக்கம்:
உன் அருள் நேராக என் நெஞ்சைக் கவர்ந்துவிட்டால்,
இந்த உலக இன்பங்களை நான் பார்க்கவும் மாட்டேன்,
தேடவும் மாட்டேன்.
அந்த அருளே எனக்குப் போதுமான சுகம்.


பாடல் 100 .
வான்காண வேண்டின் மலையேற லொக்கும்உன்னை
நான்காணப் பாவனைசெய் நாட்டம் பராபரமே.

விளக்கம் :
வானத்தை காண மலையில் ஏறுவது போல,
உன்னை காண பாவனை (உள்ளுணர்வு, தியானம்) அவசியம்.
வெளியே தேடாமல்,
உள்ளே நோக்கச் செய்யும் நாட்டமே உன்னை அடையச் செய்யும்.


101. பாடல்

வாதனைவிட் டுன்னருளின் மன்னினல்லால் வேறுமொரு
சாதனைதான் உண்டோநீ சாற்றாய் பராபரமே.

உரைநடை விளக்கம் :
எல்லா துன்பங்களையும், வேதனைகளையும் முற்றிலும் அகற்றும் உன் பேரருளில் நிலைபெறுவதைத்தவிர, வேறு எந்த சாதனையும் உண்மையான சாதனையா? என்று பராபரமான இறைவனிடம் தாயுமானவர் வினவுகிறார். முக்திக்கு வழி அருள் ஒன்றே என்கிறார்.

102. பாடல்
பாரகமும் விண்ணகமும் பற்றாக நிற்பதருள்
தாரகத்தைப் பற்றியன்றோ சாற்றாய் பராபரமே.

உரைநடை விளக்கம் :
பூமி, விண்ணுலகம் ஆகிய அனைத்தும் நிலையற்றவை; அவற்றில் பற்றில்லாமல் நிற்கச் செய்கின்ற உயர்ந்த அருள் தாரகத்தையே (வழிகாட்டும் பேரருள்) பற்ற வேண்டும் என்று கூறுகிறார். உலகும் சொர்க்கமும் இலட்சியம் அல்ல.

103. பாடல்
விளக்குந் தகளியையும் வேறென்னார் நின்னைத்
துளக்கமறச் சீவனென்று சொல்வார் பராபரமே.

உரைநடை விளக்கம் :
ஒளியூட்டும் விளக்கையும், அதில் எரியும் எண்ணெயையும் வேறுபடுத்த முடியாததுபோல, உன்னையும் ஜீவனையும் வேறுபடுத்த முடியாது. ஆனால் அறியாமையால் மனிதர்கள் ஜீவனை தனியானதாகக் கூறுகின்றனர் என்கிறார்.

104. பாடல்
பாராதி நீயாப் பகர்ந்தால் அகமெனவும்
ஆராயுஞ் சீவனுநீ யாங்காண் பராபரமே.

உரைநடை விளக்கம் :
நீயே அனைத்தாக விரிந்திருக்கும்போது, ‘அகம்’ (உள்ளம்), ‘ஜீவன்’ என்று ஆராய்பவை எல்லாமே நீயே. அப்பொழுது உன்னைத் தவிர வேறு எதைக் காண முடியும்? என்ற அத்வைத உண்மையை வெளிப்படுத்துகிறார்.

105. பாடல்
பொய்யைப்பொய் யென்றறியும் போதத்துக் காதரவுன்
மெய்யருளே அன்றோ விளம்பாய் பராபரமே.

உரைநடை விளக்கம் :
பொய்யை பொய்யாக அறியச் செய்யும் ஞானத்திற்குக் காரணம் உன் உண்மையான அருளே. அந்த அருளே மெய்ஞ்ஞானத்தின் அடிப்படை என்று இறைவனைப் போற்றுகிறார்.

106. பாடல்
வருவான்வந் தேன்எனல்போல் மன்னியழி யுஞ்சகத்தைத்
தெரிவாக இல்லையென்ற தீரம் பராபரமே.

உரைநடை விளக்கம் :
“நான் வந்தேன், நான் போகிறேன்” என்று சொல்வது போல, தோன்றி நிலைத்து அழியும் இந்த உலகம் உண்மையில் இல்லை என்று தெளிவாக அறிந்த ஞானமே உயர்ந்த வீரமாகும் என்கிறார்.

107. பாடல்
மாயா சகமிலையேல் மற்றெனக்கோர் பற்றுமிலை
நீயேநான் என்றுவந்து நிற்பேன் பராபரமே.

உரைநடை விளக்கம் :
மாயையான உலகப் பாசம் இல்லாவிட்டால், எனக்கு வேறு எந்தப் பற்றும் இல்லை. “நீயே நான்” என்ற ஒருமைப்பாட்டில் வந்து நிலைபெறுவேன் என்கிற முழு சரணாகதியை வெளிப்படுத்துகிறார்.

108. பாடல்
வானாதி நீயெனவே வைத்தமறை என்னையும்நீ
தானாகச் சொல்லாதோ சாற்றாய் பராபரமே.

உரைநடை விளக்கம் :
வேதங்கள் அனைத்தும் “வானம் முதலான அனைத்தும் நீயே” என்று சொல்கின்றன. அந்த உண்மையை எனக்கும் நீயே உள் உணர்வாக வெளிப்படுத்தி அருள வேண்டுமென்று வேண்டுகிறார்.

109. பாடல்
வெள்ளக் கருணைமத வேழமாம் நின்னருட்கென்
கள்ளக் கருத்தே கவளம் பராபரமே.

உரைநடை விளக்கம் :
பெருக்கெடுக்கும் கருணை கொண்ட யானை போன்ற உன் அருளுக்கு, என் கள்ளமான எண்ணங்களே உணவாகி விடுகின்றன. என் குறைகளையும் உன் அருள் ஏற்றுக்கொள்கிறது என்கிற பணிவு.

110. பாடல்
வண்டாய்த் துவண்டு மவுன மலரணைமேல்
கொண்டார்க்கோ இன்பங் கொடுப்பாய் பராபரமே.

உரைநடை விளக்கம் :
மவுனம் என்னும் மலரின் மேல், வண்டுபோல் மனம் மூழ்கி அமர்ந்திருப்பவர்களுக்கு நீ பேரின்பத்தை அளிக்கிறாய். மௌன சமாதி நிலையே உயர்ந்த ஆனந்தத்தின் வாசல் என்கிறார்.

பாடல் 111.
மாயைமுத லாம்வினைநீ மன்னுயிர்நீ மன்னுயிர்தேர்ந் தாயும்அறி வானதுநீ அன்றோ பராபரமே.



உரைநடை:
மாயை எனப்படும் அறியாமையும், அதிலிருந்து தோன்றும் வினைகளும், அந்த வினைகளால் நிலைக்கும் உயிர்களும் இவையெல்லாம் நீயே. அந்த உயிர்களின் உள்ளார்ந்த உண்மையையும் அறியும் அறிவாகவும் நீயே இருக்கிறாய். ஆகையால் அனைத்துக்கும் மூலமாக இருப்பவன் நீயே.

பாடல் 112.
என்னறிவும் யானும்என தென்பதுவு மாம்இவைகள் நின்னவையே அன்றோ நிகழ்த்தாய் பராபரமே.

உரைநடை:
“எனது அறிவு”, “நான்”, “எனது” என்ற அகங்கார உணர்வுகள் அனைத்தும் கூட உன்னிடமிருந்தே தோன்றியவை. அவை தனியாக இல்லை; நீயே அவையாக வெளிப்பட்டிருக்கிறாய்.


பாடல் 113.
பாரறியா தண்டப் பரப்பறியா துன்பெருமை யாரறிவார் நானோ அறிவேன் பராபரமே.

உரைநடை:
உன் பெருமை உலக அளவாலும், பிரபஞ்ச எல்லைகளாலும் அளக்க முடியாதது. அத்தகைய உன்னதமான உண்மையை யார் அறிய முடியும்? நானோ அதை அறிந்தவன் என எவ்வாறு சொல்ல முடியும்?

பாடல் 114.
அண்டம் அனைத்திலுமாய் அப்பாலுக் கப்பாலுங் கொண்டநின்னை யாரறிந்து கொள்வார் பராபரமே.

உரைநடை:
நீ எல்லா அண்டங்களிலும் நிறைந்தும், அவற்றுக்கு அப்பாலும் திகழ்ந்தும் இருக்கிறாய். இத்தகைய உன் முழுமையான நிலையைக் யார் முற்றிலும் அறிந்து கொள்ள இயலும்?

பாடல் 115.
ஒப்புயர்வொன் றின்றி ஒலிபுகா மோனவட்டக் கப்பலுக்காம் வான்பொருள்நீ கண்டாய் பராபரமே.

உரைநடை:
உனக்கு ஒப்போ, உயர்வோ இல்லை. சப்தமற்ற மௌன வட்டமாக விளங்கும் ஆகாயப் பொருளாக நீ இருக்கிறாய். சொல்லாலும் ஒலியாலும் அடைய முடியாத அந்த உன்னத நிலையே நீ.

பாடல் 116.
என்போல் எளியவரும் எங்கெங்கும் பார்த்தாலும் உன்போல் வலியவரும் உண்டோ பராபரமே.

உரைநடை:
என்னைப் போன்ற எளியவர்கள் எங்கும் இருப்பார்கள். ஆனால் உன்னைப் போன்ற பேராற்றலும் வல்லமையும் உடையவன் எங்கும் இல்லை. நீயே சக்தியின் உச்சம்.

பாடல் 117.
பார்க்கின்அண்ட பிண்டப் பரப்பனைத்தும் நின்செயலே
யார்க்குஞ் செயலிலையே ஐயா பராபரமே.

உரைநடை:
அண்டம் (பிரபஞ்சம்), பிண்டம் (உயிர்), அவற்றின் பரப்பு—எல்லாமே உன் செயலாகவே நிகழ்கிறது. உண்மையில் எந்த உயிருக்கும் தனித்த செயல்திறன் இல்லை; செய்பவன் நீயே.

பாடல் 118.
ஒன்றே பலவே உருவே அருவேயோ
என்றே அழைப்பதுன்னை என்றோ பராபரமே.

உரைநடை:
நீ ஒன்றா? பலவா? உருவமா? அருவமா? என்று பலவாறு உன்னை அழைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இவை எல்லாம் நம் புரிதலுக்கான பெயர்கள் மட்டுமே; நீ அவற்றைக் கடந்தவன்.


பாடல் 119.
செப்புவதெல் லாஞ்செபம்நான் சிந்திப்ப தெல்லாம்நின் ஒப்பில் தியானமென ஓர்ந்தேன் பராபரமே.


உரைநடை:
நான் பேசும் சொற்கள் அனைத்தும் ஜபமாகவும், நான் சிந்திக்கும் எண்ணங்கள் அனைத்தும் உன் ஒப்பற்ற தியானமாகவும் இருக்கின்றன என்று உணர்ந்தேன். வாழ்க்கையே உன் வழிபாடாக மாறுகிறது.

பாடல் 120.
ஆரிருந்தேன் ஆர்போய்என் ஆரமுதாம் நின்னருளின் சீரிருந்தால் உய்வேன் சிவமே பராபரமே.


உரைநடை:
நான் யார், யார் போனார்கள் என்பதெல்லாம் முக்கியமில்லை. என் உயிர்க்கு அமுதமாக விளங்கும் உன் அருள் சிறிதளவும் நிலைத்திருந்தால், அதுவே எனக்கு முக்தி. சிவமே, பராபரமே—உன் அருளே என் ஆதாரம்.

பாடல் 121.
வஞ்சநமன் வாதனைக்கும் வன்பிறவி வேதனைக்கும்
அஞ்சி உனையடைந்தேன் ஐயா பராபரமே.

விளக்கம்:
மனத்தின் வஞ்சனைகளாலும், மீண்டும் மீண்டும் வரும் பிறவித் துன்பங்களாலும் அஞ்சிய கவிஞர், அவற்றிலிருந்து விடுபட இறைவனை ஒரே சரணாகக் கொண்டுள்ளார்.


பாடல் 122.
எந்தப் படியுன் இதயம் இருந்ததெமக்
கந்தப் படிவருவ தன்றோ பராபரமே.

விளக்கம்:
இறைவனின் இதயம் கருணையால் நிரம்பியிருப்பதுபோலவே, அதே கருணை அடியார்களிடமும் வெளிப்படுகிறது என்பதை உணர்த்துகிறது.

பாடல் 123.
எந்தெந்த நாளும் எனைப்பிரியா தென்னுயிராய்ச் சிந்தைகுடி கொண்டஅருள் தேவே பராபரமே.

விளக்கம்:
இறைவன் வெளியில் தனியாக இருப்பவன் அல்ல; அடியாரின் மனத்திலும் உயிரிலும் ஒன்றாய் குடிகொண்டிருப்பவன்.

பாடல் 124.
அஞ்சல் அஞ்சல் என்றடிமைக் கப்போதைக் கப்போதே
நெஞ்சில் உணர்த்தும் நிறைவே பராபரமே.

விளக்கம்:
இறைவன் தன் அருளால் அடியார்களின் உள்ளத்தில் பயத்தை அகற்றி, எப்போதும் தைரியத்தையும் நம்பிக்கையையும் ஊட்டுகிறான்.

பாடல் 125.
என்னையுன்றன் கைக்களித்தார் யாவரென்னை யான்கொடுத்துப்
பின்னை யுன்னாற் பெற்றநலம் பேசேன் பராபரமே.

விளக்கம்:
தன்னை முழுவதுமாக இறைவனிடம் ஒப்படைத்த பிறகு, கிடைக்கும் அருளானுபவம் அளவற்றது; அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.


பாடல் 126.
வாய்பேசா யூமையென வைக்கவென்றோ நீமவுனத்
தாயாக வந்தருளைத் தந்தாய் பராபரமே.


விளக்கம்:
இது அறிவின்மையின் மவுனமல்ல; ஞானத்தின் மவுனம். பேசத் தெரியாத நிலை அல்ல, பேசத் தேவையில்லாத உயர்ந்த அனுபவம்.

பாடல் 127.
தன்னைத்தந் தென்னைத் தடுத்தாண்ட நின்கருணைக் கென்னைக்கொண் டென்னபலன் எந்தாய் பராபரமே.

விளக்கம்:
இறைவன் தன்னை முழுவதுமாக அருளி அடியாரை ஆட்கொள்ளும் போது, அதற்கு ஈடாக மனிதன் கொடுக்கக்கூடியது எதுவும் இல்லை.

பாடல் 128.
மார்க்கண்டர்க் காக மறலிபட்ட பாட்டைஉன்னிப் பார்க்கின்அன் பர்க்கென்ன பயங்காண் பராபரமே.

விளக்கம்:
மார்க்கண்டேயனை காக்க மரணத்தையே வென்ற இறைவனை நினைத்தால், உண்மையான பக்தருக்கு எந்த அச்சமும் இருக்காது.

பாடல் 129.
சுட்டியுண ராமல் துரியநிலை யாய்வெளியில் விட்டநின்னை யானோ வியப்பேன் பராபரமே.

விளக்கம்:
சொல்லாலும் சிந்தையாலும் சுட்டிக் காட்ட முடியாத நான்காவது நிலையாக (துரியம்) நிற்கும் பரம்பொருளின் மகத்துவம் வியப்பை ஏற்படுத்துகிறது.

பாடல் 130.
சூதொன்று மின்றியென்னைச் சும்மா இருக்கவைத்தாய் ஈதொன்றும் போதாதோ இன்பம் பராபரமே.

விளக்கம்:
எல்லா ஆசைகளும் சூழ்ச்சிகளும் அகன்று, அமைதியான நிலையில் இருப்பதே உயர்ந்த ஆனந்தம் என்பதை இந்தப் பாடல் கூறுகிறது.

இனி அடுத்த பாகத்தில்........

சி எஸ் சிவா 

காகபுஜண்டர் ஞானம் பாடல் 15

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 15 பாடல் : முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது   மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும் சத்தியடா மனந்தானே யேக மாகத் ...