திங்கள், 25 மே, 2026

காகபுஜண்டர் ஞானம் பாடல் 25

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 25

பாடல் :

பாரப்பா நாக்கையுந்தான் அண்ணாக் கேத்திப்
  பார்த்தனிலே பார்த்தவர்க்குப் பலித மில்லை
ஆரப்பா கண்வெடிக்குந் தேகம் போகும்
  அடயோக மென்பார்க ளாகா தப்பா!
சாரப்பா மனந்தனையண் ணாக்கில் நேரே
  சார்ந்துமிகப் பார்க்கையிலே வாசி தானும்
வீரப்பா மேலடங்குங் கீழ்நோக் காது
  வெட்டாத சக்கரத்தை யறிய லாமே.

உரைநடை விளக்கம்:

இந்தப் பாடலில் காகபுஜண்ட சித்தர் போலியான யோகப் பயிற்சிகளை கடுமையாகக் கண்டிக்கிறார்.

நாக்கை மேலே தூக்கி அண்ணாக்கில் வைத்துக் கொண்டு, அதையே பெரிய யோகம் என்று நினைத்து இருப்பவர்களுக்கு எந்த பலனும் இல்லை என்று நேராகச் சொல்கிறார்.

அப்படி தவறாகப் பயிற்சி செய்தால் கண் பாதிக்கும், உடம்பும் கெடும் என்று எச்சரிக்கிறார். அதனால்தான் “அடயோகம்” — அதாவது தவறான யோகம் — என்று சொல்கிறார்.

யோகம் என்பது உடலை வதைக்கும் செயல் அல்ல. மனம் அண்ணாக்கு மையத்தில் நேராக நிலைபெற வேண்டும். அங்கே மனம் உறுதியாக நின்று கவனித்தால் தான் வாசி மேலே அடங்க ஆரம்பிக்கும்.

அப்போது வாசி கீழே இழுக்காமல் மேலே நிலைபெறும். அந்த நிலையில் தான் “வெட்டாத சக்கரம்” — அதாவது உள்ளே இருக்கும் நுண்ணிய சக்தி மையம் — அறியப்படும்.

வெளி வேஷம் போட்ட யோகம் அல்ல இது.
மனம் நிலைபெறும் உள் அனுபவம்.

சி. எஸ். சிவா

வெள்ளி, 15 மே, 2026

காகபுஜண்டர் ஞானம் பாடல் 24

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 24

பாடல் :

தானென்ற பிரமத்தை யடுத் திடாமல்
  தாரணியில் தெய்வமடா அனந்த மென்றும்
ஊனென்ற குருவென்றுஞ் சீட னென்றும்
  உதயகிரி பாராத வுலுத்த மாடு
வேனென்ற பொய்களவு கொலைகள் செய்து
  வேசையர்மே லாசைவைத்து வீண னாகிக்
கோனென்ற குருபாதம் அடைய மாட்டான்
  கூடுவான் நரகமதில் வீழ்வான் பாரே.

உரைநடை விளக்கம்:

இந்தப் பாடலில் காகபுஜண்ட சித்தர் மிகவும் கடுமையாக மனிதர்களின் போலி ஆன்மீக வாழ்க்கையைச் சாடுகிறார்.

தனக்குள் இருக்கும் பிரம்மத்தை அறியாமல், வெளியே ஆயிரம் தெய்வங்கள் என்று அலைந்து திரிவதால் பயன் இல்லை என்று சொல்கிறார்.

“குரு”, “சீடன்” என்று வாயால் பேசிக்கொண்டு, உள்ளே எந்த அனுபவமும் இல்லாமல் வாழ்பவர்களை “உலுத்த மாடு” என்று சித்தர் திட்டுகிறார். “உதயகிரி” — அதாவது உள்ளே எழும் ஞான ஒளியை கூட பார்க்காதவன், ஆன்மீகம் பேசுவதற்கு தகுதியற்றவன் என்பதையே அவர் தாக்கமாகச் சொல்கிறார்.

பொய், களவு, கொலை செய்து, வேசையர் மேலே ஆசை வைத்து, வெளியில் மட்டும் பக்தி வேஷம் போட்டால், அவனால் குருபாதத்தை அடைய முடியாது என்று சித்தர் சொல்கிறார்.

அப்படிப்பட்டவன் இறுதியில் வீழ்வான் என்றும் எச்சரிக்கிறார்.
ஏனென்றால் உள்ளே சுத்தம் இல்லாமல், வெளிப்புற வேஷத்தால் ஞானம் வராது.

பிரம்மத்தை உள்ளே காணாதவன் —
எவ்வளவு ஆன்மீகம் பேசினாலும் வெறும் வாய்ச் சவடால் தான்.

சி. எஸ். சிவா

திங்கள், 20 ஏப்ரல், 2026

அகம் பாவம்

அகம் பாவமே புறத்தில் பாவச் செயலாகிறது!.

நான் வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கும்போது அடிக்கடி ஒரு கேள்வி என்னுள் எழுகிறது — மனிதன் ஏன் பாவம் செய்கிறான்? பாவம் என்பது வெளியில் நடக்கும் ஒரு செயல் மட்டுமா, அல்லது அதற்கு முன்னால் உள்ளத்தில் ஏதோ ஒரு மறைமூலம் இருக்கிறதா? இந்தக் கேள்விக்கான பதிலை தேடும்போது நான் உணர்ந்தது, பாவத்தின் உண்மையான தொடக்கம் வெளியில் இல்லை; அது அகத்தில் தான் உள்ளது என்பதே.

“அகம்” என்பது வெறும் மனம் அல்ல; அது “நான்” என்ற உணர்வு. “நான்”, “எனது”, “எனக்காக” என்ற பற்றுதலே அகம். இந்த அகம் வளரும்போது, மனிதன் தன்னை மற்றவர்களிலிருந்து பிரித்துக் காணத் தொடங்குகிறான். அங்கேயே பாவத்தின் முதல் விதை விழுகிறது.

ஒருவன் “நான் உயர்ந்தவன்” என்று நினைக்கிறான்; மற்றொருவன் “எனக்கே எல்லாம் வேண்டும்” என்று ஆசைப்படுகிறான்; இன்னொருவன் “அவன் உயரக்கூடாது” என்று பொறாமை கொள்கிறான். இவை எல்லாம் வெளிப்புறச் செயல்கள் அல்ல. இவை மனதில் அமைதியாக உருவாகும் அகப்பாவங்கள். இதை யாரும் பார்க்க முடியாது. ஆனால் இவையே பின்னர் பெரிய புறப்பாவங்களாக மாறுகின்றன.

ஒரு மனிதன் திருடுவதற்கு முன், அவன் மனதில் பேராசை தோன்றுகிறது. ஒருவன் பொய் பேசுவதற்கு முன், பயம் அல்லது சுயநலம் உருவாகிறது. ஒருவன் கோபத்தில் ஒருவரை காயப்படுத்துவதற்கு முன், அவன் உள்ளத்தில் வெறுப்பு வளர்கிறது. ஆகவே, பாவம் என்பது செயலில் தொடங்குவதில்லை; அது எண்ணத்தில் தொடங்குகிறது.

இதனால்தான் சித்தர்கள் முதலில் அகத்தை சுத்தப்படுத்த வேண்டும் என்று கூறுகின்றனர். வெளியில் நல்லவன் போல நடிப்பது போதாது; உள்ளம் தூய்மையாக இருக்க வேண்டும். அகம் அழுக்காக இருந்தால், புறத்தில் எவ்வளவு நல்ல செயல்கள் செய்தாலும் அது முழுமையான ஞானம் ஆகாது.

“அகம் அழிந்தால் சிவம் வெளிப்படும்” என்று சித்தர்கள் கூறுவது மிகவும் ஆழமான உண்மை. அகம்பாவம் குறைந்தால், மனிதன் பணிவை அடைகிறான். “நான்” என்ற பிடிப்பு குறைந்தால், அன்பு பெருகுகிறது. போட்டி குறைகிறது. பகை மறைகிறது. சமத்துவம் பிறக்கிறது. இதுவே இறை உணர்வின் தொடக்கம்.

அகம்பாவம் என்பது வெறும் தற்பெருமை அல்ல; அது எல்லா பாவங்களுக்கும் மூல காரணம். அகம் உள்ளவரை பாவம் இருக்கும். அகம் கரைந்தால் பாவமும் கரையும். அதனால் உண்மையான ஆன்மீகம் கோவிலில் தொடங்குவதில்லை; அது உள்ளத்தின் சுத்தத்தில் தொடங்குகிறது.

நாம் உலகத்தை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் முதலில் நம் அகத்தை மாற்ற வேண்டும். சமுதாயத்தில் அமைதி வேண்டும் என்றால், மனித மனத்தில் அமைதி வேண்டும். சட்டம் மனிதனை கட்டுப்படுத்தலாம்; ஆனால் ஞானம் மட்டுமே மனிதனை மாற்ற முடியும்.

எனவே, நான் உணர்ந்த மிகப் பெரிய உண்மை என்னவென்றால் — பாவத்தின் தொடக்கம் புறத்தில் இல்லை; அகத்தில்தான். அகம் தான் விதை. அகப்பாவம் தான் வேர். புறப்பாவம் அதன் பழம்.

ஒரு சிலர் தங்களை மிகவும் உயர்வாக நினைத்து அகம்பாவத்தில் வாழ்கிறார்கள். சிலர் தங்களை மிகவும் தாழ்வாக நினைத்து துன்பப்படுகிறார்கள். இரண்டிலும் மையம் “நான்” என்பதே.

“நான் பெரியவன்” என்பது உயர்வு அகம்பாவம்.
“நான் மிகவும் தாழ்ந்தவன்” என்பதும் தாழ்வு அகம்பாவம்.

இரண்டிலும் மனிதன் தன்னையே மையமாக வைத்து சிந்திக்கிறான். ஒன்று பெருமையால் கட்டுப்படுகிறது; மற்றொன்று தாழ்வு உணர்வால் கட்டுப்படுகிறது. ஆனால் இரண்டிலும் உண்மையான அமைதி இல்லை.

ஒருவன் தன்னை உயர்வாக நினைத்தால் பிறரை இகழ்வான். தன்னை மிகத் தாழ்வாக நினைத்தால் தன்னையே துன்பப்படுத்திக் கொள்வான். இரண்டும் ஞானப் பாதைக்கு தடையாகும்.

மனிதன் தன்னை வெறுக்க வேண்டியதும் இல்லை; தன்னை பெருமைப்பட வேண்டியதும் இல்லை. தன்னை அறிய வேண்டும்.

உண்மையான ஞானம் என்பது:

“நான் பெரியவன்” என்பதுமல்ல,
“நான் ஒன்றுமில்லை” என்பதுமல்ல,
“நான் யார்?” என்று உணர்வதே.

அங்கே தான் அகம்பாவம் கரைகிறது. அங்கே தான் அமைதி பிறக்கிறது. அங்கே தான் மனிதன் உண்மையாக மனிதனாகிறான்.

நன்றி.

அன்புடன்,
சி. எஸ். சிவா
நிறுவனர் & தலைவர்
தாயுமானவர் ஞான சபை அறக்கட்டளை

காகபுஜண்டர் ஞானம் பாடல் 23

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 23

பாடல் :

பாரப்பா மலரெடுத்து லிங்கம் வைத்துப்
  பார்த்தீப லிங்கத்தைப் பணியா மற்றான்
வீரப்பா நீராட்டிப் பூசை செய்து
  வீணர்கள்தாம் கத்தபம்போற் கதறு வார்கள்
தேரப்பா மலரதனைக் கிள்ளும் போது
  செத்தசனம் போலாச்சுத் தெளிந்து பாரு
காரப்பா மனங்கொண்டு பரத்தி னூடே
  கண்டவரே கயிலாசத் தேகந் தானே.

உரைநடை விளக்கம்:

இந்தப் பாடலில் காகபுஜண்ட சித்தர் வெளிப்புற பூஜையைப் பற்றி ஒரு ஆழமான உண்மையைச் சொல்கிறார்.

மலரை எடுத்து லிங்கத்திற்கு வைத்து, அபிஷேகம் செய்து, பெரிய சத்தத்தோடு பூஜை செய்தாலும் அதனால் மட்டும் உண்மை கிடைக்காது என்று சித்தர் சொல்கிறார்.

ஏன் தெரியுமா? நீ பூஜைக்கு எடுக்கும் அந்த மலரையே கிள்ளும் போது, அது உயிரை இழந்துவிடுகிறது. அதைப் பார்த்து சித்தர் கேட்கிறார் — உயிரை அறியாமல் பூஜை செய்வதால் என்ன பயன்?

வெளிப்புற வழிபாடு தவறு என்று அவர் சொல்லவில்லை. ஆனால் மனம் இல்லாத பூஜை வீண் என்று சொல்கிறார். குரல் உயர்ந்தால் பக்தி உயராது. உள்ளம் விழித்தால் தான் அர்த்தம் உண்டு.

“மனங்கொண்டு பரத்தினூடே காண்பவர்” — அதாவது மனதை உள்ளே திருப்பி, பரம்பொருளை தன்னுள் உணர்ந்தவர் — அவருக்கே உண்மையான கயிலாசம்.

கயிலாசம் எங்கோ மலையில் இல்லை.
உள்ளம் சுத்தமாகும் இடமே கயிலாசம்.

அதை உணர்ந்தவனே
உண்மையான சிவபூஜை செய்தவன்.

சி. எஸ். சிவா

புதன், 15 ஏப்ரல், 2026

காகபுஜண்டர் ஞானம் பாடல் 22

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 22

பாடல் :

நில்லென்றால் லோகத்தில் மனிதர் தாமும்
  நிட்டையுடன் சமாதியுமே பொருந்தா மற்றான்
வல்லவர்போல் வேதபுரா ணங்காவ் யங்கள்
  மந்திரங்கள் கோடானு கோடி யென்றும்
சொல்லுவார் கோவிலென்றுந் தீர்த்த மென்றுந்
  திருடர்கள்தா னலைந்தலைந்து திரிவார் மட்டை
வெல்வதொரு பிரமநிலை யறியா மற்றான்
  வேரற்ற மரம்போலே விழுவார் பாரே.

உரைநடை விளக்கம்:

இந்தப் பாடலில் காகபுஜண்ட சித்தர் மிகவும் நேராகச் சொல்லுகிறார்.

கருத்தையூன்றி “நில்” — அதாவது மனம் நின்று நிலைபெறு என்று சொன்னாலும், மனிதன் அதில் நிலையாக இருக்க முடியாமல் தவிக்கிறான். சமாதி நிலையைப் பற்றி கேள்விப்படுவான், ஆனால் அதை அவனால் அனுபவமாக்கிட முடியாது.

அதற்கு பதிலாக என்ன செய்கிறான்? வேதம், புராணம், மந்திரம் என்று ஆயிரம் விஷயங்களைப் பற்றி பேசுவான். கோவில், தீர்த்தம் என்று வெளியில் அலைந்து திரிவான்.

சித்தர் கடுமையாகச் சொல்கிறார் — இது எல்லாம் உள்ளத்தின் உண்மையை அறியாமல் வெளியே அலைந்து திரிவது தான். அப்படி அலைந்து திரிவவன் உள்ளே பார்க்காதவரை அவனுக்குப் பயன் என்பது இல்லவே இல்லை.

பிரம்ம நிலையைப் பற்றி அறியாதவன், வெளியில் எவ்வளவு விஷயங்களை தெரிந்திருந்தாலும், உள்ளே அடிப்படை அறிவு இல்லாமல் இருப்பான். வேரில்லாத மரம் போலவும் , மரத்தின் கழிவான மட்டை போலவும் அவன் ஒருநாள் சரிந்து விழுவான்.

அதனால் தான் சொல்கிறார் —கடவுளைக் காண 
வெளியில் அலைந்து திரியாதே.

உள்ளத்தில் நில்.
அங்கே தான் ஆதாரம் உள்ளது.

சி. எஸ். சிவா

திங்கள், 13 ஏப்ரல், 2026

காகபுஜண்டர் ஞானம் பாடல் 21

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 21

பாடல் :

விளையாடிப் போதமய மாக வுந்தான்
  வெட்டாத சக்கரத்தின் வெளிச்சம் பார்த்து
நிலையான அண்டமதில் நெற்றிக் கண்ணை
  நீயறிந்தே அரவுவிடந் தன்னைப் போக்கி
அலையாம லாரொருவ ருறவு மற்றே
  ஆயிழையாள் மோகமதை யதட்டித் தள்ளி
மலையாமற் பிரமமே துணையென் றெண்ணி
  மவுனமென்று மந்தனையு மடக்கி நில்லே.

உரைநடை விளக்கம்:

இந்தப் பாடலில் காகபுஜண்ட சித்தர் ஒரு நிலையைத் தெளிவாகச் சொல்கிறார்.

மனம் சுத்தமாகி, அனுபவம் ஆழமாக வந்துவிட்டால், வாழ்க்கையே ஒரு விளையாட்டு மாதிரி தோன்றும். அந்த நிலையில் “வெட்டாத சக்கரம்” — அதாவது உள்ளே இருக்கும் நுண்ணிய சக்தி மையத்தின் ஒளி — தெளிவாகத் தெரியும்.

அப்போது நெற்றிக் கண், அதாவது உள் பார்வை, நிலையாக திறக்கும். அதனால் உடம்புக்குள் ஓடும் விஷ ஓட்டங்கள் — கோபம், ஆசை, பயம் — இவை மெதுவாக குறைந்து போகும்.

அதற்குப் பிறகு மனம் வெளியே அலைந்து திரியாது. தேவையற்ற உறவுகள், பற்றுகள் குறையும். குறிப்பாக ஆசை, மோகங்கள் — இவை தானாக விலகும்.

அப்புறம் ஒரே நினைப்பு தான் இருக்கும் — “பிரம்மம் தான் துணை”. அந்த நம்பிக்கை நிலையாக வந்துவிட்டால் மனம் அமைதியாகும்.

“மவுனம்” என்றால் வாயை மூடுவது இல்லை. மனத்தின் அலைச்சலை அடக்குவது. அது அடங்கியதும், உள்ளே ஒரு நிலை பிறக்கும்.

அங்கே நின்றவனுக்கு வாழ்க்கை சுமை இல்லை.
அது ஒரு தெளிவு.

சி. எஸ். சிவா

காகபுஜண்டர் ஞானம் பாடல் 28

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 28 பாடல் : விளையாடிக் கருநெல்லி பறித்தே உண்ணு   வேகாத தலையாகும் விரும்பிப் பாரு மலையாமல் வெண்சாரை பிடித்தே யுண்ணு ...