காகபுஜண்டர் ஞானம் – பாடல் 22
பாடல் :
நில்லென்றால் லோகத்தில் மனிதர் தாமும்
நிட்டையுடன் சமாதியுமே பொருந்தா மற்றான்
வல்லவர்போல் வேதபுரா ணங்காவ் யங்கள்
மந்திரங்கள் கோடானு கோடி யென்றும்
சொல்லுவார் கோவிலென்றுந் தீர்த்த மென்றுந்
திருடர்கள்தா னலைந்தலைந்து திரிவார் மட்டை
வெல்வதொரு பிரமநிலை யறியா மற்றான்
வேரற்ற மரம்போலே விழுவார் பாரே.
உரைநடை விளக்கம்:
இந்தப் பாடலில் காகபுஜண்ட சித்தர் மிகவும் நேராகச் சொல்லுகிறார்.
கருத்தையூன்றி “நில்” — அதாவது மனம் நின்று நிலைபெறு என்று சொன்னாலும், மனிதன் அதில் நிலையாக இருக்க முடியாமல் தவிக்கிறான். சமாதி நிலையைப் பற்றி கேள்விப்படுவான், ஆனால் அதை அவனால் அனுபவமாக்கிட முடியாது.
அதற்கு பதிலாக என்ன செய்கிறான்? வேதம், புராணம், மந்திரம் என்று ஆயிரம் விஷயங்களைப் பற்றி பேசுவான். கோவில், தீர்த்தம் என்று வெளியில் அலைந்து திரிவான்.
சித்தர் கடுமையாகச் சொல்கிறார் — இது எல்லாம் உள்ளத்தின் உண்மையை அறியாமல் வெளியே அலைந்து திரிவது தான். அப்படி அலைந்து திரிவவன் உள்ளே பார்க்காதவரை அவனுக்குப் பயன் என்பது இல்லவே இல்லை.
பிரம்ம நிலையைப் பற்றி அறியாதவன், வெளியில் எவ்வளவு விஷயங்களை தெரிந்திருந்தாலும், உள்ளே அடிப்படை அறிவு இல்லாமல் இருப்பான். வேரில்லாத மரம் போலவும் , மரத்தின் கழிவான மட்டை போலவும் அவன் ஒருநாள் சரிந்து விழுவான்.
அதனால் தான் சொல்கிறார் —கடவுளைக் காண
வெளியில் அலைந்து திரியாதே.
உள்ளத்தில் நில்.
அங்கே தான் ஆதாரம் உள்ளது.
சி. எஸ். சிவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக