புதன், 25 மார்ச், 2026

காகபுஜண்டர் ஞானம் பாடல் 17

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 17

பாடல் :

பார்க்கலாம் ஒருகாலை உயரத் தூக்கிப்
  பாடுவா னொருகாலைத் தாழ விட்டே
ஏர்க்கையிலே மேல்நோக்குங் காலைக் கேளாய்
  என்மகனே மதியென்ப ததற்குப் பேரு
கார்க்கையிலே கீழ்நோக்குங் காலை மைந்தா
  கண்டுபார் ரவியென்று கருத லாகும்
மார்க்கமுடன் அண்டவுச்சி மேலே தானும்
  மகத்தான வன்னியிருப் பிடந்தான் பாரே.

உரைநடை விளக்கம்:

இங்கே காகபுஜண்டர் சித்தர் ஒரு உதாரணம் காட்டி ஞான ரகசியத்தை நமக்குச் சொல்கிறார்.

ஒரு கால் (காற்று) மேலிருந்து கீழாகவும், இன்னொரு கால் (காற்று) கீழிருந்து மேலாகவும் சுழல்கிறது என்று சொல்கிறார். இதை நேராக உடலுடம்போடு பொருத்திப் பார்க்க வேண்டாம். இது உள்ளுடம்பான ஒளியுடம்பின் சக்தி ஓட்டம் பற்றியது.

மேலே நோக்கி இருக்கும் ஓட்டம் — அதுதான் “மதி”, சந்திரகலை ஓட்டம்.
கீழே நோக்கி இருக்கும் ஓட்டம் — அதுதான் “ரவி”, சூரியகலை ஓட்டம்.

இந்த இரண்டு ஓட்டங்களும் உடம்புக்குள் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. அதை கவனிக்காமல் இருந்தால் அது சாதாரண வாழ்க்கை. அதை கவனித்து அறிந்தால் தான் யோக வாழ்க்கைப் பயணம் தொடங்கும்.

இந்த இரண்டு ஓட்டங்களையும் சரியாக வழிநடத்தி மேலே கொண்டு சென்றால், அண்ட உச்சியில் ஒரு நிலை கிடைக்கும். அங்கே தான் “வன்னி” — அதாவது அக்னி சக்தி — நிலைபெறும்.

இதைக் கேட்டாலோ,படித்தாலோ மட்டும் போதும் என்று விட்டு விடாதே.
ஆர்வத்துடன் உள்ளே கவனித்து, உற்றுப் பார்த்து பழகு.

சூரியன், சந்திரன், அக்னி — மூன்றும் உன்னுள் தான் வேலை செய்கிறது என்று தெளிவாகத் தெரியும்.

சி. எஸ். சிவா

வெள்ளி, 20 மார்ச், 2026

காகபுஜண்டர் ஞானம் பாடல் 16

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 16

பாடல் :

தானென்ற கற்பமடா மதுவுண் டக்கால்
சஞ்சார சமாதியென்ப ததற்குப் பேரு
ஊனென்ற பசிதீரும் கோபம் போகும்.
உதயகிரி தனிற்சென்றூ டுருவிப் பார்க்கத்
தேனென்ற திரையேழுந் தீய்ந்து போகுந்
திரிவாரே உச்சிநடுச் சென்ற போது
கோனென்ற கருவியெல்லா மொடுங்கிப் போகுங்
கூற்றுவனா ராட்டமதைப் பார்க்கலாமே.

உரைநடை விளக்கம்:

இங்கே நமது காகபுஜண்டர் சித்தர் “கற்ப நிலை” பற்றி சொல்கிறார். அந்த நிலை ஒருவனுக்கு வந்துவிட்டால், அந்த நிலையென்பது சாதாரண தியான அனுபவம் இல்லை அதுவே “சஞ்சார சமாதி” நிலையாகும்.இந்ந நிலையில் அனுபவம் பெற்ற பயிற்சியாளன் எங்கு இருந்தாலும் அவனுள் அமைதி என்பது உடன் இருக்கும்.

அந்த நிலையில் உடல் பசியும் கோபமும் குறைந்து மனத்தின். உள்ளே ஒரு சமநிலை உருவாகும்.

“உதயகிரி” என்று சொல்வது தலைக்குள் உதயம். அதாவது உள்ளே எழும் சூரிய ஒளியைப் பார்க்க ஆரம்பிக்கும் நிலையாகும். அப்போது மனத்தில் எழும் ஆசை, அலைச்சல், எண்ணங்கள் — இவை எல்லாம் மெதுவாக கரைந்து போகும்.

அவன் அந்த உச்சி நிலைக்கு சென்றபோது, உடம்பு, புலன், கருவிகள் — இவை எல்லாம் பின்னால் போய்விடும். அவன் உள்ளே மட்டும் நிலைபெறும்.

அந்த நிலையில் கூட, “கூற்றுவன்” — மரணம் — கூட ஒரு நிகழ்வாகத் தான் தெரியும். பயமாக இல்லை. அது ஒரு விளையாட்டு போலப் புரியும்.

இது கேட்டு புரிந்து கொள்ளும் விஷயம் இல்லை.பயிற்சியில்
அந்த நிலை அனுபவம் வந்தால் தான் தெரியும்.

அப்போது தான் புரியும் 
உயிருக்கு பயப்பட வேண்டியது என்று இவ்வுலகில் எதுவும் இல்லை என்று.

சி. எஸ். சிவா

வியாழன், 12 மார்ச், 2026

காகபுஜண்டர் ஞானம் பாடல் 15

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 15

பாடல் :

முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது
  மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும்
சத்தியடா மனந்தானே யேக மாகத்
  தனித்திருந்து நித்திரையைத் தள்ளி மைந்தா!
புத்தியடா பிரமத்திற் புகுந்து கொண்டாற்
  பூலோக மெல்லாந்தான் பணியு முன்னை;
எத்தியே திரியாமற் பிடரி மார்க்கம்
  ஏறுகின்ற வாசியுந்தான் கற்பந் தானே.

உரைநடை விளக்கம்:

இந்தப் பாடலில் சித்தர் மந்திரம் பற்றிய ஒரு முக்கியமான உண்மையைச் சொல்கிறார். முத்தி பெற வேண்டும் என்று நினைத்து மந்திரத்தை மட்டும் மனதில் நினைத்துக் கொண்டே இருந்தால், மனம் இரண்டாகிப் போகும் என்று அவர் எச்சரிக்கிறார். அதாவது மனம் ஒரு பக்கம் மந்திரத்தை நினைக்கும்; இன்னொரு பக்கம் உலகத்தை நினைக்கும். இப்படியாக மனம் இரண்டாகிப் போனால் அதில் நிலையான நிலை வராது.

உன் மனம் அமைதியாக  வேண்டும். அது அலைந்து திரியாமல் ஒருமைப்பட வேண்டும். அதற்காக தான் அவர் “நித்திரையைத் தள்ளி” என்று சொல்கிறார். அதாவது அறியாமை தூக்கத்தை விட்டு விழித்திருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறார்.

மனம் ஒருமையாகி புத்தி பிரம்மத்தில் சென்று நிலைபெற்றால், மனிதனின் உள்ளம் தெய்வீகமாக. மாறிவிடும். அப்போது உலகம் அவனை அடிமையாக்காது; மாறாக அவன் பெற்று நிற்கின்ற நிலைக்கு உலகமே பணிந்து நிற்கும் என்று சித்தர் பெருமான் நமக்கு சுட்டுகிறார்.

இதற்கான வழி என்ன? அலைந்து திரியும் மனத்தை அடக்கி, பிடரி மார்க்கம் என்று சொல்லப்படும் அந்த நடு ஓட்டத்தில் வாசியை ஏற்ற வேண்டும். அதாவது மூச்சின் நுண்ணிய ஓட்டத்தை மேலே செலுத்தி நிலைநிறுத்த வேண்டும்.

அப்படி வாசி மேலே ஏறி நிலைபெற்றால் தான் யோகத்தின் உண்மையான கற்பம் — அதாவது நிலையான அனுபவம் — கிடைக்கும் என்று சித்தர் கூறுகிறார்.

சி. எஸ். சிவா

காகபுஜண்டர் ஞானம் பாடல் 14

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 14

பாடல் :

காணார்கள் பிரம்முந்தா னுதிக்கு முன்னே
  கருணையுள்ள மந்திரங்கள் பிறந்த துண்டோ?
தோணாமல் மந்திரங்க ளனந்தங் கற்றுச்
  சுழுனையென்ற மூக்குநுனி தன்னைப் பார்த்து
வீணாகத் திரிந்து மிகப் பித்தர் போலே
  வேரோடே கெட்டுழல்வான் விருதா மாடு;
கோணாம வண்ணாக்கின் நேரே மைந்தா!
  குறிப்பறிந்து பார்த்தவர்க்கே முத்தி தானே.

உரைநடை விளக்கம்:

இந்தப் பாடலில் சித்தர் மிகவும் நேராக ஒரு உண்மையைச் சொல்கிறார். “பிரம்மம் தோன்றும் முன்பே மந்திரங்கள் இருந்ததா?” என்று கேட்கிறார். அதாவது, மனிதன் உருவாக்கிய மந்திரங்கள் எல்லாம் பின்னர் வந்தவை. ஆதாரம் அதற்கு முன்பே இருந்தது.

பலர் என்ன செய்கிறார்கள் தெரியுமா? எண்ணற்ற மந்திரங்களை கற்றுக் கொள்கிறார்கள். நூல்கள் படிக்கிறார்கள். ஆனால் தங்களுள் உள்ள மைய ஆதாரத்தை நோக்கிப் பார்க்க மறந்துவிடுகிறார்கள். “சுழுமுனை” என்று சொல்லப்படும் அந்த உள் மைய ஆதாரத்தை  அறியாமல், மூக்குநுனியை மட்டும் பார்த்து உட்கார்ந்தால் பயனேதும் இல்லை என்று சித்தர் சுட்டுகிறார்.

அப்படி வழி தெரியாமல் தவறான பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டே  சுற்றிக்கொண்டு இருந்தால், அந்த மனிதன் பித்தன் போல அலைந்து கொண்டே இருப்பான். வாழ்க்கை முழுவதும் தேடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். ஆகவே அடிப்படை குறியைப் பார்க்காமல் தேடுபவனின் அந்த தேடல் பயனின்றியே போய்விடும்.

அதனால் தான் நமது சித்தர் சொல்லுகிறார் கிழட்டு மாடாகி அடிமாடு ஆகிப்போவான் என்பதால் நீங்கள் மனம் சாயாமல், கோணாமல், நேராக உள்ளே சுழுமுனை மையத்தை நோக்கிப் பார்க்க வேண்டும். அந்த உள் யோகக்குறியை உணர்ந்தவனுக்கே விடுதலை.

மந்திரங்கள் பல இருக்கலாம்.
ஆனால் குறி ஒன்று தான்.

அந்த குறியை சரியாக அறிந்து அதில் பயிற்சி செய்து அனுபவம் பெறுபவனுக்கே 
முத்தி என்பது நிச்சயம் கிடைக்கும்.

சி. எஸ். சிவா

வியாழன், 5 மார்ச், 2026

காகபுஜண்டர் ஞானம் பாடல் 13

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 13

பாடல் :

பாரான சாகரமே அண்ட வுச்சி
  பதினாலு லோகமெல்லாம் பரத்தி னூடே
சீராகத் தெரியுமடா மவுன மார்க்கஞ்
  சித்தான சித்துவிளை யாடிநிற்கும்.
வீரான மந்திரங்கள் பிறந்த தெப்போ?
  விஷ்ணுவென்றும் பிரமனென்றும் வந்த தெப்போ
கூரான முக்குணங்க ளுதித்த தெப்போ?
  கூறாத அட்சரத்தின் குறியைக் காணே.

உரைநடை விளக்கம்:

இந்தப் பாடலில் சித்தர் மிகவும் ஆழமான கேள்விகளை எழுப்புகிறார். “அண்ட உச்சி” என்று சொல்லப்படும் அந்த உள் நிலையை அடைந்தவனின் பார்வை மாறிவிடும் என்று அவர் சொல்கிறார். அப்போது இந்த பூமி மட்டும் அல்ல — பதினான்கு உலகங்களாகச் சொல்லப்படும் எல்லா நிலைகளும் ஒரே பரம்பொருளின் வெளிப்பாடாகத் தெளிவாகத் தெரியும்.

இந்த அனுபவம் மவுன மார்க்கத்தில் தான் கிடைக்கும். மவுனம் என்றால் வாயை மூடிக் கொள்வது அல்ல. மனம் அடங்கி நின்று உள்ளே விழிக்கும் நிலை. அந்த அமைதிக்குள் தான் சித்தத்தின் விளையாட்டு ஆரம்பமாகிறது.

அதற்குப் பிறகு சித்தர் சில கேள்விகளை எழுப்புகிறார். “மந்திரங்கள் எப்போது பிறந்தது? விஷ்ணு, பிரமா என்ற பெயர்கள் எப்போது வந்தது? மூன்று குணங்கள் எப்போது தோன்றியது?” என்று கேட்கிறார்.

இந்தக் கேள்விகளின் பொருள் — இவை எல்லாம் பின்னர் வந்த விளக்கங்கள். மனிதன் புரிந்து கொள்ள உருவான பெயர்கள். ஆனால் அதற்கு முன் இருந்தது ஒரு அடிப்படை உண்மை.

அதை சித்தர் “பேசாத மந்திரம்” என்று சுட்டிக்காட்டுகிறார். வாயால் சொல்லப்படாத மந்திரம். அது உணர்வில் தெரியும் மந்திரம் — உணர்வுரு மந்திரம்.

அதை கேட்டால் அறிய முடியாது.
அதை உணர்ந்தால் தான் புரியும்.

அந்த பேசாத மந்திரத்தின் குறியை தான் காண வேண்டும் —
அதுவே ஆன்மீகத்தின் மையம்.

சி. எஸ். சிவா

புதன், 4 மார்ச், 2026

காகபுஜண்டர் ஞானம் பாடல் 12

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 12

பாடல் :

போமடா முன்சொன்ன நரம்பி னூடே
  பூரித்து ரவிமதியுஞ் சுடர்தாம் மூன்றும்
ஆமடா பின்னியுங் கீழே பாயும்
  அந்தரங்கந் தனைப்பார்க்க அடங்கிப் போகும்
நாமடா வெளிதிறந்து சொல்லி விட்டோம்
  நாதாந்த பரப்பிரம நாட்டந் தன்னை
ஓமடா விந்துவுந்தான் அண்ட வுச்சி
  உறுதியுடன் சித்தமதை யூன்றிப் பாரே.

உரைநடை விளக்கம்:

இந்தப் பாடலில் சித்தர் முன்பு கூறிய அதே நரம்பு ஓட்டத்தைத் தான் மீண்டும் நினைவூட்டுகிறார். அந்த நடுநாடி வழியாக சக்தி மேலே எழும்பும் போது, சூரிய கலை, சந்திர கலை, அக்னி கலை என்று சொல்லப்படும் மூன்று ஒளிச் சக்திகளும் அதில் பூரித்து நிற்கும் என்று கூறுகிறார்.

அந்த மூன்று சக்திகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து மீண்டும் கீழ்நோக்கிப் பாயும். ஆனால் இது வெளியில் பார்க்கும் விஷயம் அல்ல. உள்ளத்தை அமைதியாக்கி கவனமாக இருந்தால் தான் அந்த அந்தரங்க ஓட்டம் உணரப்பட ஆரம்பிக்கும்.

“இதனை நாங்கள் மறைக்கவில்லை; வெளிப்படையாகச் சொல்கிறோம்” என்று சித்தர் இங்கே சொல்கிறார். இதுவே நாதாந்த பரப்பிரம்மத்தின் நடை. அதாவது ஒளியும் நாதமும் ஒன்றாகும் உள் அனுபவ நிலை.

“விந்து” என்று சொல்வது உயிரின் மைய சக்தி. அது அண்ட உச்சியில் நிலைபெறும் போது தான் அனுபவம் தெளிவாகத் தொடங்கும். அதற்காக மனதை உறுதியாக அங்கே நிலைநிறுத்திப் பார்க்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.

இதை வாசிப்பதால் மட்டும் புரியாது.
மனம் அமைதியாக மையத்தில் நின்றால் தான் மெதுவாக அனுபவம் வெளிப்படும்.

அப்போது தான் புரியும் —
உயிர், ஒளி, நாதம் என்று இவைகள் யாவும் வேறுபட்டவை அல்ல என்று.

சி. எஸ். சிவா

செவ்வாய், 3 மார்ச், 2026

காகபுஜண்டர் ஞானம் பாடல் 11

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 11

பாடல் :

பாரடா புருவமத்தி யேதென் றக்கால்
  பரப்பிரம மானதோர் அண்ட வுச்சி
நேரடா முன்சொன்ன நரம்பு மத்தி
  நிலைத்ததடா சுழுனையென்று நினைவாய்ப் பாரு
வீரடா அண்ணாக்கில் நேரே மைந்தா!
  மேவடா மனந்தனையுஞ் செலுத்தும் போது
காரடா சுழுனையிலே மனந்தான் பாய்ந்து
  கலந்தைந்து பூதமுந்தான் ஒன்றாய்ப் போமே.

உரைநடை விளக்கம்:

“புருவ மத்தி எது?” என்று ஒருவர் கேட்டால், சித்தர் நேராகச் சொல்கிறார் — பார், அதுவே அண்ட உச்சி. அதுவே பரப்பிரம்ம நிலை. அது வெளியில் எங்கோ இல்லை; உனது புருவ மத்தியமே அதன் வாசல் ஆகும்.

முந்தைய பாடலில் கூறிய அந்த நுண்ணிய நரம்பு, அதாவது நடுநாடி ஓட்டம், அங்கேயே வந்து நிலைபெறுகிறது. அதுவே “சுழுமுனை” என்று சொல்லப்படுவது. இதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இது ஒரு இடம் மட்டும் அல்ல; ஒரு அனுபவ நிலை.

“அண்ணாக்கு” என்று சொல்வது உண்ணாக்குக்கு மேல் தலையின் உள் மையம். மனதை அங்கே செலுத்தும் போது தான் உண்மையான ஆன்மீக திருப்புமுனை வாழ்வில் தொடங்குகிறது. மனம் கீழே ஓடிக்கொண்டிருந்தால் ஆன்மீக அனுபவம் இல்லை. அது மேலே திரும்ப வேண்டும். அப்போதுதான் அனுபவங்கள் சித்திக்கும்.

மனம் சுழுமுனையில் பாய்ந்து நிலைபெற்றால், உடம்பு, உயிர், சித்தம் — இவை வேறுபட்டதாக இல்லாமல் ஒன்றுபட்டு விடுகிறது. ஐம்பூதங்களாகத் தோன்றிய இந்த உடல் உணர்ச்சி கூட ஒன்றாய் ஒரே அனுபவமாக கரைந்து போகும். பிரிவு உணர்வு அறவே மங்கிப் போகும்.

இதைக் கேட்பதால் மட்டும் ஒருவனால் புரிந்து கொள்ள முடியாது.
மனம் புருவ மத்தியில் நிலைபெற்று ஆன்மீக அனுபவம் பெறும் தருணமே இதன் ரகசியம் புரிய வரும் நேரம்.

அங்கே சென்றவன் தனது உள் அனுபவத்தில் தனியாக இருப்பது இல்லை —
அவன் பேரண்டத்தோடு ஒன்றாய் கலந்து இருப்பான்.

சி. எஸ். சிவா

காகபுஜண்டர் ஞானம் பாடல் 24

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 24 பாடல் : தானென்ற பிரமத்தை யடுத் திடாமல்   தாரணியில் தெய்வமடா அனந்த மென்றும் ஊனென்ற குருவென்றுஞ் சீட னென்றும்...