வியாழன், 5 மார்ச், 2026

காகபுஜண்டர் ஞானம் பாடல் 13

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 13

பாடல் :

பாரான சாகரமே அண்ட வுச்சி
  பதினாலு லோகமெல்லாம் பரத்தி னூடே
சீராகத் தெரியுமடா மவுன மார்க்கஞ்
  சித்தான சித்துவிளை யாடிநிற்கும்.
வீரான மந்திரங்கள் பிறந்த தெப்போ?
  விஷ்ணுவென்றும் பிரமனென்றும் வந்த தெப்போ
கூரான முக்குணங்க ளுதித்த தெப்போ?
  கூறாத அட்சரத்தின் குறியைக் காணே.

உரைநடை விளக்கம்:

இந்தப் பாடலில் சித்தர் மிகவும் ஆழமான கேள்விகளை எழுப்புகிறார். “அண்ட உச்சி” என்று சொல்லப்படும் அந்த உள் நிலையை அடைந்தவனின் பார்வை மாறிவிடும் என்று அவர் சொல்கிறார். அப்போது இந்த பூமி மட்டும் அல்ல — பதினான்கு உலகங்களாகச் சொல்லப்படும் எல்லா நிலைகளும் ஒரே பரம்பொருளின் வெளிப்பாடாகத் தெளிவாகத் தெரியும்.

இந்த அனுபவம் மவுன மார்க்கத்தில் தான் கிடைக்கும். மவுனம் என்றால் வாயை மூடிக் கொள்வது அல்ல. மனம் அடங்கி நின்று உள்ளே விழிக்கும் நிலை. அந்த அமைதிக்குள் தான் சித்தத்தின் விளையாட்டு ஆரம்பமாகிறது.

அதற்குப் பிறகு சித்தர் சில கேள்விகளை எழுப்புகிறார். “மந்திரங்கள் எப்போது பிறந்தது? விஷ்ணு, பிரமா என்ற பெயர்கள் எப்போது வந்தது? மூன்று குணங்கள் எப்போது தோன்றியது?” என்று கேட்கிறார்.

இந்தக் கேள்விகளின் பொருள் — இவை எல்லாம் பின்னர் வந்த விளக்கங்கள். மனிதன் புரிந்து கொள்ள உருவான பெயர்கள். ஆனால் அதற்கு முன் இருந்தது ஒரு அடிப்படை உண்மை.

அதை சித்தர் “பேசாத மந்திரம்” என்று சுட்டிக்காட்டுகிறார். வாயால் சொல்லப்படாத மந்திரம். அது உணர்வில் தெரியும் மந்திரம் — உணர்வுரு மந்திரம்.

அதை கேட்டால் அறிய முடியாது.
அதை உணர்ந்தால் தான் புரியும்.

அந்த பேசாத மந்திரத்தின் குறியை தான் காண வேண்டும் —
அதுவே ஆன்மீகத்தின் மையம்.

சி. எஸ். சிவா

புதன், 4 மார்ச், 2026

காகபுஜண்டர் ஞானம் பாடல் 12

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 12

பாடல் :

போமடா முன்சொன்ன நரம்பி னூடே
  பூரித்து ரவிமதியுஞ் சுடர்தாம் மூன்றும்
ஆமடா பின்னியுங் கீழே பாயும்
  அந்தரங்கந் தனைப்பார்க்க அடங்கிப் போகும்
நாமடா வெளிதிறந்து சொல்லி விட்டோம்
  நாதாந்த பரப்பிரம நாட்டந் தன்னை
ஓமடா விந்துவுந்தான் அண்ட வுச்சி
  உறுதியுடன் சித்தமதை யூன்றிப் பாரே.

உரைநடை விளக்கம்:

இந்தப் பாடலில் சித்தர் முன்பு கூறிய அதே நரம்பு ஓட்டத்தைத் தான் மீண்டும் நினைவூட்டுகிறார். அந்த நடுநாடி வழியாக சக்தி மேலே எழும்பும் போது, சூரிய கலை, சந்திர கலை, அக்னி கலை என்று சொல்லப்படும் மூன்று ஒளிச் சக்திகளும் அதில் பூரித்து நிற்கும் என்று கூறுகிறார்.

அந்த மூன்று சக்திகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து மீண்டும் கீழ்நோக்கிப் பாயும். ஆனால் இது வெளியில் பார்க்கும் விஷயம் அல்ல. உள்ளத்தை அமைதியாக்கி கவனமாக இருந்தால் தான் அந்த அந்தரங்க ஓட்டம் உணரப்பட ஆரம்பிக்கும்.

“இதனை நாங்கள் மறைக்கவில்லை; வெளிப்படையாகச் சொல்கிறோம்” என்று சித்தர் இங்கே சொல்கிறார். இதுவே நாதாந்த பரப்பிரம்மத்தின் நடை. அதாவது ஒளியும் நாதமும் ஒன்றாகும் உள் அனுபவ நிலை.

“விந்து” என்று சொல்வது உயிரின் மைய சக்தி. அது அண்ட உச்சியில் நிலைபெறும் போது தான் அனுபவம் தெளிவாகத் தொடங்கும். அதற்காக மனதை உறுதியாக அங்கே நிலைநிறுத்திப் பார்க்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.

இதை வாசிப்பதால் மட்டும் புரியாது.
மனம் அமைதியாக மையத்தில் நின்றால் தான் மெதுவாக அனுபவம் வெளிப்படும்.

அப்போது தான் புரியும் —
உயிர், ஒளி, நாதம் என்று இவைகள் யாவும் வேறுபட்டவை அல்ல என்று.

சி. எஸ். சிவா

செவ்வாய், 3 மார்ச், 2026

காகபுஜண்டர் ஞானம் பாடல் 11

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 11

பாடல் :

பாரடா புருவமத்தி யேதென் றக்கால்
  பரப்பிரம மானதோர் அண்ட வுச்சி
நேரடா முன்சொன்ன நரம்பு மத்தி
  நிலைத்ததடா சுழுனையென்று நினைவாய்ப் பாரு
வீரடா அண்ணாக்கில் நேரே மைந்தா!
  மேவடா மனந்தனையுஞ் செலுத்தும் போது
காரடா சுழுனையிலே மனந்தான் பாய்ந்து
  கலந்தைந்து பூதமுந்தான் ஒன்றாய்ப் போமே.

உரைநடை விளக்கம்:

“புருவ மத்தி எது?” என்று ஒருவர் கேட்டால், சித்தர் நேராகச் சொல்கிறார் — பார், அதுவே அண்ட உச்சி. அதுவே பரப்பிரம்ம நிலை. அது வெளியில் எங்கோ இல்லை; உனது புருவ மத்தியமே அதன் வாசல் ஆகும்.

முந்தைய பாடலில் கூறிய அந்த நுண்ணிய நரம்பு, அதாவது நடுநாடி ஓட்டம், அங்கேயே வந்து நிலைபெறுகிறது. அதுவே “சுழுமுனை” என்று சொல்லப்படுவது. இதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இது ஒரு இடம் மட்டும் அல்ல; ஒரு அனுபவ நிலை.

“அண்ணாக்கு” என்று சொல்வது உண்ணாக்குக்கு மேல் தலையின் உள் மையம். மனதை அங்கே செலுத்தும் போது தான் உண்மையான ஆன்மீக திருப்புமுனை வாழ்வில் தொடங்குகிறது. மனம் கீழே ஓடிக்கொண்டிருந்தால் ஆன்மீக அனுபவம் இல்லை. அது மேலே திரும்ப வேண்டும். அப்போதுதான் அனுபவங்கள் சித்திக்கும்.

மனம் சுழுமுனையில் பாய்ந்து நிலைபெற்றால், உடம்பு, உயிர், சித்தம் — இவை வேறுபட்டதாக இல்லாமல் ஒன்றுபட்டு விடுகிறது. ஐம்பூதங்களாகத் தோன்றிய இந்த உடல் உணர்ச்சி கூட ஒன்றாய் ஒரே அனுபவமாக கரைந்து போகும். பிரிவு உணர்வு அறவே மங்கிப் போகும்.

இதைக் கேட்பதால் மட்டும் ஒருவனால் புரிந்து கொள்ள முடியாது.
மனம் புருவ மத்தியில் நிலைபெற்று ஆன்மீக அனுபவம் பெறும் தருணமே இதன் ரகசியம் புரிய வரும் நேரம்.

அங்கே சென்றவன் தனது உள் அனுபவத்தில் தனியாக இருப்பது இல்லை —
அவன் பேரண்டத்தோடு ஒன்றாய் கலந்து இருப்பான்.

சி. எஸ். சிவா

திங்கள், 2 மார்ச், 2026

காகபுஜண்டர் ஞானம் பாடல் 10

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 10

பாடல் :

கேளப்பா மூலமடா லிங்கந் தன்னில்
  கிருபையுடன் தண்டுக்குங் கீழ்மே லாக
நாளப்பா தமர்போலே பிடர் மார்க்கம்
  நன்றாக ஓடுமடா நரம்பி னூடே
வாளப்பா அண்டமுட்டி வுயர மைந்தா!
  வலுவாக முன்சொன்ன நரம்பி னூடே
தேளப்பா சேர்ந்துமிகப் பின்ன லாகிச்
  சிறந்திடவே புருவமத்தி யாகும் பாரே.

உரைநடை விளக்கம்:

இங்கே நமது சித்தர் இன்னும் தெளிவாகப் பேசுகிறார். “மூலம்” என்று சொல்வது அடிப்படை மையம். அங்கே லிங்க சக்தி அமைதியாக உறங்கிக் கிடக்கிறது. குருநாதரின் கிருபை சேர்ந்தால்தான் அந்த சக்தி தானாகவே மேலெழும். இதை வலுக்கட்டாயமாக இழுக்க முடியாது என்பதையும் அவர் உணர்த்துகிறார்.

“தண்டு” என்று சொல்வது முதுகுத்தண்டு வழியாக ஓடும் சக்தி ஓட்டம். அது கீழிருந்து மேலாக மெதுவாக நகரும். “பிடரி மார்க்கம்” என்பது நடு ஓட்டம் — நேரான பாதை. அது சரியாக ஓடும்போது தான் யோகத்தின் உண்மையான அனுபவம் தொடங்கும். இந்த அனுபவத்தை பெற்று நிலையாக நிற்பவர்களை தண்டபாணிகள் என்றும், அனுபவம் பெற்று அதை நிலைநிறுத்தாமல் தவறவிட்டவர்களை தண்டமானவர்கள் என்றும் கூறுவர்.

இந்த ஓட்டம் வலுவாக மேலே சென்று அண்ட உச்சியைத் தொடும். முன்பு கூறிய அந்த நுண்ணிய நரம்பு வழியே மீண்டும் முன்னோக்கி வந்து, புருவ மத்தியில் சேர்ந்துவிடும். அங்கே தான் இரண்டு ஓட்டங்களும் ஒன்றாகிப் பின்னிப் பிணைந்து ஒரு மையமாக நிலைபெறும்.

குரு சுட்டிக் காட்டிய பின்னர், ஒருவனது புருவ மத்தியம் உயிருள்ள மையமாகத் திகழத் தொடங்கும். அது கற்பனையல்ல; அனுபவ நிலை.

யோகம் என்பது வெளியில் செய்யும் சாதனை அல்ல.
உள்ளுக்குள் எழுந்து, மையத்தில் நிலைபெறும் ஓட்டத்தை அறிதல்தான் யோகப் பயிற்சியின் ரகசியம் என்பதை அவன் புரிந்து கொள்வான்.

சி. எஸ். சிவா

காகபுஜண்டர் ஞானம் பாடல் 9

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 9

பாடல் :

பாரப்பா பரப்பிரமம் ஒளிவி னாலே
  பத்திலே நரம்புவழி பாயும் போது
ஆரப்பா இருகண்ணில் ஒளிவ தாகி
  அண்டமெல்லாம் ஏகமாய்த் தெரிய லாச்சு
காரப்பா நரம்பென்ற விழுது வட்டம்
  கபாலத்தில் முக்கூறாய்ச் சுழுனை யாச்சு
வீரப்பா காதுக்கும் நாக்குக் குந்தான்
  வெற்றிபெற இன்னமுந்தா னுரைக்கக் கேளே.

உரைநடை விளக்கம்:

இங்கே நமது சித்தர் பரப்பிரம்ம அனுபவத்தின் அடுத்த நிலையை எடுத்துச் சொல்கிறார். பரப்பிரம்மம் ஆனது ஒளியாக வெளிப்படும் போது, அந்த ஒளிச் சக்தி உடலின் நுண்ணிய நரம்பு வழியே பாய்கிறது என்கிறார். இது சாதாரண நரம்பு ஓட்டம் அல்ல; ஞான ஒளியின் ஓட்டம்.

அந்த ஒளி இரு கண்களின் விழி மையத்தில் தெளிவாக உணரப்படும் போது, உலகம் தனித்தனியாகத் தெரியாது. அண்டமெங்கும் ஒரே ஆதாரம் என்ற உணர்வு மேலோங்கி எழும். “ஏகம்” என்ற உண்மை அனுபவமாகி நிற்கும்.

“நரம்பென்ற விழுது வட்டம்” என்று கூறுவது, கபால மையத்தில் உருவாகும் ஒரு சுழற்சி அனுபவம் ஆகும். அதாவது ஞானம் பயிலுபவன் தலையின் நடு மையத்தில் ஒரு மைய சுழி போல சக்தி திரளும். அது மூன்று கூறுகளாகச் சுழலும் — இதுவே முன்பு கூறிய சூரிய, சந்திர, அக்னி சக்திகளின் ஒருமை நிலை பெற்று சுழுமுனை அனுபவம் சித்தி ஆகும்.

அடுத்ததாக அவர் காதும் நாவும் பற்றிக் கூறப் போவதாக சுட்டுகிறார். அதாவது, இந்த உள்நாதம், உள்ஒளி அனுபவம், உணர்வுகள் முற்றிலும் மாற்றும் பெறும். கேட்பதும், பேசுவதும் முந்தைய காலங்களைப் போல் சாதாரணமாக இருக்காது. 

ஞான யோகத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால், இந்த நுண்ணிய மாற்றங்களை மாணவன் அறிந்திருக்க வேண்டும்.

இது வெறும் நூலறிவு அல்ல.ஒருவனது பயிற்சி அனுபவம் வளர வளர இவை தெளிவாகும்.

சி. எஸ். சிவா

காகபுஜண்டர் ஞானம் பாடல் 8

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 8

பாடல் :

வாறான பிரமத்தில் நடுவே மைந்தா!
  வந்ததடா ரவிமதியுஞ் சுடர்மூன் றாகி
கூறாகப் பின்னியடா கீழே பாயுங்
  கூறுகிறேன் இருக்கண்ணில் ஒளிவைக் கேளு;
வீறான அண்டவுச்சி முனைக்கப் பாலே
  வெற்றியுடன் நரம்பதுதான் விழுது போலே
நேராக இருகண்ணிற் பின்ன லாகி
  நிச்சயமா யொளிவாகி நிறைந்தார் பாரே.

உரைநடை விளக்கம்:

இங்கே நமது சித்தர் மிகவும் நுண்ணிய யோக ரகசியத்தைத் திறந்து சொல்கிறார். “பிரமத்தின் நடுவே” என்று கூறுவது, சுத்த சித்த நிலையின் நடுமையத்தைச் சுட்டுகிறது. அந்த நடுமைய அனுபவத்தில்தான் சூரிய கலை, சந்திர கலை, அக்னி கலை எனச் சொல்லப்படும் மூன்று ஒளிச் சக்திகளும் தலையில் ஒன்றாய் உணரப்படுகின்றன.

இந்த மூன்று சக்திகள் தனித்தனியாக இல்லாமல், ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து உடலின் கீழ்நிலைகளுக்கு ஓடுகின்றன என்றும் அவர் கூறுகிறார். இதை வெளியில் தேட முடியாது; 

“இருக்கண்ணில் ஒளி” என்று சொல்வது உள் பார்வையை. இரண்டு கண்களின் இடையே தோன்றும் நுண்ணிய ஒளி அனுபவத்தை உணரச் சொல்கிறார்.

அண்டத்தின் (தலை) உச்சியிலிருந்து ஒரு நரம்பு விழுது போல இறங்குகிறது என்கிறார். இது உடல் நரம்பு பற்றி அல்ல; சூட்சும உடலின் ஓட்டத்தின் வழியே அந்த ஓட்டம் நேராக இரு கண்களின் மையத்தில் பின்னிப் பிணைந்து ஒளியாக வெளிப்படுகிறது. அதுவே தியானத்தில் அனுபவிக்கும் அகஒளி ஆகும்.

இந்த ஒளி கற்பனையால் அல்ல. மனம் நிசப்தமாகி, மூச்சு சீராகி, சிந்தனை ஒருமையடைந்தால், அது நிச்சயமாகத் தோன்றும். அப்போது மனிதன் வெளி ஒளியைப் பார்க்கவில்லை; தன்னுள் நிரம்பிய ஒளியைப் பார்க்கிறான்.

இந்த நிலையை அடைந்தவன் தேடுபவன் அல்ல; கண்டவன்.
அவன் உள்ளம் ஒளியாகி நிற்கும்.

சி. எஸ். சிவா

வியாழன், 26 பிப்ரவரி, 2026

கார்மேகம்

கார்மேகம்;

கார்மேகம் — வெளிப்படையாக அது இருளின் அடையாளம் போலத் தோன்றினாலும், ஆன்மீகக் கண்ணோட்டத்தில் அது கருணையின் வடிவமாகும்.

வெயிலின் வெப்பம் நிலத்தை வாட்டுவது போல வாழ்க்கையின் சோதனைகள் மனதை வாட்டுகின்றன. அப்போது வானத்தின் எல்லையில் மெதுவாக கருமேகம் திரண்டு வருவது போல, மனிதனின் உள்ளத்தில் ஒரு தேடல் எழுகிறது. அந்த தேடலே ஆன்மீகப் பயணத்தின் முதல் அறிகுறி.

கார்மேகம் முதலில் வெளிச்சத்தை மறைக்கிறது. அது இருள் அல்ல; ஓய்வு. அது முடிவு அல்ல; மாற்றத்தின் தொடக்கம். அதன் கருமை, ஒளி பிறக்க வேண்டிய கருவறை.

மின்னல் பளிச்சென்று ஒளிரும் ஒரு கணத்தில் உலகம் தெளிவாகத் தெரியும். அதுபோல் தியானத்தின் சில தருணங்களில் உண்மை மின்னல் போல உள்ளத்தைத் துளைக்கிறது. அந்த ஒரு அனுபவமே பயணத்தைத் தொடர வைக்கும் சக்தியாகிறது.

மழை பொழியும் போது வறண்ட நிலம் உயிர்ப்பெடுக்கிறது. இறை அருள் பொழியும் போது உலர்ந்த மனம் நனைகிறது. “நான்” என்ற அகம்பாவம் மெதுவாக கரைகிறது.

கார்மேகம் கலைந்தபின் வானம் மேலும் தெளிவாகிறது. சோதனைகள் கடந்தபின் மனிதன் மேலும் ஆழமாகிறார்.

ஆக, கார்மேகம் என்பது இருளின் அடையாளமல்ல; அது புதுப்பிறப்பின் அறிகுறி.

அன்புடன்,
சி. எஸ். சிவா

காகபுஜண்டர் ஞானம் பாடல் 24

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 24 பாடல் : தானென்ற பிரமத்தை யடுத் திடாமல்   தாரணியில் தெய்வமடா அனந்த மென்றும் ஊனென்ற குருவென்றுஞ் சீட னென்றும்...