சனி, 4 ஏப்ரல், 2026

பராபரக்கண்ணி 1. 10

1.
சீராரும் தெய்வத் திருவருளாம் பூமி முதல்
பாராதி ஆண்ட பதியே பராபரமே.

விளக்கம்:
பூமி முதல் அண்ட சராசரம் என அனைத்திற்கும் மூலமாகவும் இயக்க சக்தியாகவும் தெய்வம் தனது திருவருளால் எல்லாவற்றையும் நடத்துகிறது என்பதை உணர்ந்து கொண்டேன் பராபரமே!.

2.
கண்ணாரக் கண்டோர் கருப்பொருள் காணாமல்
அருள் விண்ணூடு இருந்த இன்ப வெற்பே பராபரமே.

விளக்கம்:
உன்னை உண்மையாகக் கண்ட ஞானிகள் மறுபிறவி என்னும் கருப்பைச் சுற்றில் சிக்காமல் விடுதலை பெறுகின்றனர்; விண்ணிலிருந்து ஓயாமல் இன்ப அருளை பொழியும் பரம்பொருள் நீயே பராபரமே!.

3.
சிந்தித்த எல்லாம் என் சிந்தை அறிந்து ஏயுதவ
வந்த கருணை மழையே பராபரமே.

விளக்கம்:
என் மனதில் எழும் எண்ணங்களையும் ஆழ்ந்த சிந்தனைகளையும் அறிந்து, தேவையான உதவியாக கருணையாய் வந்து பொழியும் அருள் மழையே நீ பராபரமே!.

4.
ஆரா அமுதே அரசே ஆனந்த வெள்ளப்
பேராறே இன்பப் பெருக்கே பராபரமே.

விளக்கம்:
தீராத அமுதமாகவும், எல்லாவற்றுக்கும் அரசனாகவும், ஆனந்த வெள்ளமாக பெருகி வரும் பேரின்ப நதியாகவும் நீ விளங்குகிறாய் பராபரமே.

5.
ஆர் அறிவார் என்ன அனந்த மறை ஓலமிடும்
பேரறிவே இன்பப் பெருக்கே பராபரமே.

விளக்கம்:
அனந்தமான வேதங்களே உன்னை முழுமையாக விளக்க முடியாமல் ஒலிக்கின்றன; அளவற்ற பேரறிவும் பேரின்பத்தின் ஆதாரமும் நீயே பராபரமே.

6.
உரை இறந்த அன்பருளத் தோங்கு ஒளியாய் ஓங்கி
கரை இறந்த இன்பக் கடலே பராபரமே.

விளக்கம்:
வார்த்தைகளால் கூற முடியாத அன்பும் அருளும் ஒளியாக உயர்ந்து, எல்லை இல்லாத இன்பக் கடலாய் அனுபவிக்கப்படுகிறாய் பராபரமே.

7.
எத்திக்கும் தானாகி என் இதயத்தே ஊறித்
தித்திக்கும் ஆனந்தத் தேவே பராபரமே.

விளக்கம்:
எல்லாத் திசைகளிலும் நீயே பரவி, என் இதயத்தில் ஊறி இனிமையாக அனுபவமாக விளங்கும் ஆனந்த சக்தி நீயே பராபரமே.

8.
திக்கொடு கீழ் மேலும் திருவருளாம் பொற்பறிந்தோர்
கைக்குள் வளர் நெல்லிக் கனியே பராபரமே.

விளக்கம்:
எல்லாத் திசைகளிலும் பரவும் திருவருளை உணர்ந்த ஞானிகளுக்கு, கையில் வளர்க்கும் நெல்லிக்கனி போல நெருக்கமான அனுபவமாக நீ இருப்பது பராபரமே!.

9.
முத்தே பவளமே மொய்த்த பசும் பொற்சுடரே
சித்தே என் உள்ளத் தெளிவே பராபரமே.

விளக்கம்:
முத்து, பவளம் போன்ற அரிய ஒளிமிக்க பொருளாய், உள்ளத்தில் விளங்கும் அறிவுத் தெளிவாக நீ இருப்பது பராபரமே!.

10.
கண்ணே கருத்தே என் கற்பகமே கண்ணிறைந்த
விண்ணே ஆனந்த வியப்பே பராபரமே.

விளக்கம்:
என் கண்களாகவும் சிந்தனையாகவும், வேண்டிய அனைத்தையும் தரும் கற்பக மரமாகவும், எல்லையற்ற ஆனந்த ஆகாயமாகவும் நீ நிறைந்திருக்கிறாய் பராபரமே!.

வியாழன், 2 ஏப்ரல், 2026

காகபுஜண்டர் ஞானம் பாடல் 19

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 19

பாடல் :

காணாத காட்சியெல்லாங் கண்ணிற் கண்டு
  காகமடா புசுண்டரென்று பேரும் பெற்றேன்
தோணாமல் நானலைந்து சிறிது காலம்
  துருவமென்ற பிரமத்தை யடுத்துக்கேட்க
நாணாமல் அண்டவுச்சி தன்னி லேதான்
  நாடியே மனத்தாலே நாட்ட மாகக்
கோணாமல் பாருமென்றே எனக்குச் சொல்லக்
  கூசாமல் மனமொன்றா யிருத்தி னேனே.

உரைநடை விளக்கம்:

இந்தப் பாடலில் காகபுஜண்ட சித்தர் தன் அனுபவத்தையே நேராகச் சொல்கிறார்.

“காணாத காட்சிகளை எல்லாம் கண்டேன்” என்று ஆரம்பிக்கிறார். அதாவது வெளியில் காண முடியாத உள் அனுபவங்களை உணர்ந்தேன் என்று சொல்கிறார். அதனால் தான் “புசுண்டர்” என்ற நிலையை அடைந்தேன் என்று கூறுகிறார்.

ஆனால் அவர் பிறந்த நாளிலேயே இந்நிலைக்கு வரவில்லை. “நானும் அலைந்தேன்” என்று அவர் சொல்கிறார். சிறிது காலம் தேடி திரிந்தார். “துருவம்” — அதாவது நிலையான பிரம்ம நிலையை அறிய முயன்றார்.

பிறகு என்ன நடந்தது? வெளியில் தேடாமல், அண்ட உச்சிக்குள் திரும்பிப் பார்த்தார். மனதை அங்கேயே நாட்ட ஆரம்பித்தார்.

“கோணாமல் பார்” — அதாவது மனம் சாயாமல், நேராக உள்ளே நோக்கு என்று அவருக்கு உள் அறிவு சொல்லியது. அதை கேட்டு அவர் தயக்கமில்லாமல் மனதை ஒருமைப்படுத்தி அங்கேயே நிறுத்தினார்.

அதுதான் திருப்புமுனை.

அலைந்து திரிந்தவர் — உள்ளே திரும்பினார்.
மனம் சிதறியிருந்தது — ஒன்றானது.

அங்கே இருந்துதான் உண்மை திறக்கிறது.

சி. எஸ். சிவா

காகபுஜண்டர் ஞானம் பாடல் 18

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 18

பாடல் :

பாரப்பா இதையறியார் சித்தர் கூடிப்
  பார்தனிலே அறுபத்து நாலு யோகம்
ஆரப்பா இருக்குமென்று வெவ்வே றாக
  அலைந்தலைந்து கெட்டவர்க ளனந்தங் கோடி
நேரப்பா ராசாங்க யோகம் பார்த்து
  நிலையறிந்து கண்டவனே கோடிக் கொன்று
வீரப்பா பேசாமல் மனக்கண் ணாலே
  விந்துவடா பாய்ந்ததலம் வெளியைக் காணே.

உரைநடை விளக்கம்:

இந்தப் பாடலில் காகபுஜண்ட சித்தர் கொஞ்சம் கடுமையாக ஒரு உண்மையைச் சொல்கிறார்.

பல சித்தர்கள் கூட “அறுபத்து நாலு யோகம்” என்று சொல்லி, பல பாதைகள் என்று பிரித்து பேசுகிறார்கள். அதை நம்பி மக்கள் என்ன செய்கிறார்கள்? இடம் இடமாக அலைந்து திரிகிறார்கள். வாழ்க்கையும் அப்படியே போய்விடுகிறது.

ஆனால் உண்மை அவ்வளவு சிக்கலானது இல்லை. ஒரே மார்க்கம் தான் — அதை சித்தர்கள் “ராசாங்க யோகம்” என்று சொல்கிறார்கள். அந்த நிலையை நேராகப் பார்த்து, அனுபவித்து அறிந்தவன் தான் உண்மையில் கண்டவன்.

அவன் பேசிக் கொண்டிருக்க மாட்டான்.
அவன் உள்ளே பார்த்துக் கொண்டிருப்பான்.

“மனக்கண்” என்று சொல்வது உள் பார்வை. அந்த பார்வையால் “விந்து” பாயும் இடத்தை கவனித்து பார்த்தால், ஒரு அக வெளி தெளிவாகத் தெரியும்.

இதுதான் யோகம்.
அலைந்து திரிவது அல்ல.

நேராக உள்ளே பார்த்தவனுக்கே —
உண்மை தெரியும்.

சி. எஸ். சிவா

புதன், 25 மார்ச், 2026

காகபுஜண்டர் ஞானம் பாடல் 17

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 17

பாடல் :

பார்க்கலாம் ஒருகாலை உயரத் தூக்கிப்
  பாடுவா னொருகாலைத் தாழ விட்டே
ஏர்க்கையிலே மேல்நோக்குங் காலைக் கேளாய்
  என்மகனே மதியென்ப ததற்குப் பேரு
கார்க்கையிலே கீழ்நோக்குங் காலை மைந்தா
  கண்டுபார் ரவியென்று கருத லாகும்
மார்க்கமுடன் அண்டவுச்சி மேலே தானும்
  மகத்தான வன்னியிருப் பிடந்தான் பாரே.

உரைநடை விளக்கம்:

இங்கே காகபுஜண்டர் சித்தர் ஒரு உதாரணம் காட்டி ஞான ரகசியத்தை நமக்குச் சொல்கிறார்.

ஒரு கால் (காற்று) மேலிருந்து கீழாகவும், இன்னொரு கால் (காற்று) கீழிருந்து மேலாகவும் சுழல்கிறது என்று சொல்கிறார். இதை நேராக உடலுடம்போடு பொருத்திப் பார்க்க வேண்டாம். இது உள்ளுடம்பான ஒளியுடம்பின் சக்தி ஓட்டம் பற்றியது.

மேலே நோக்கி இருக்கும் ஓட்டம் — அதுதான் “மதி”, சந்திரகலை ஓட்டம்.
கீழே நோக்கி இருக்கும் ஓட்டம் — அதுதான் “ரவி”, சூரியகலை ஓட்டம்.

இந்த இரண்டு ஓட்டங்களும் உடம்புக்குள் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. அதை கவனிக்காமல் இருந்தால் அது சாதாரண வாழ்க்கை. அதை கவனித்து அறிந்தால் தான் யோக வாழ்க்கைப் பயணம் தொடங்கும்.

இந்த இரண்டு ஓட்டங்களையும் சரியாக வழிநடத்தி மேலே கொண்டு சென்றால், அண்ட உச்சியில் ஒரு நிலை கிடைக்கும். அங்கே தான் “வன்னி” — அதாவது அக்னி சக்தி — நிலைபெறும்.

இதைக் கேட்டாலோ,படித்தாலோ மட்டும் போதும் என்று விட்டு விடாதே.
ஆர்வத்துடன் உள்ளே கவனித்து, உற்றுப் பார்த்து பழகு.

சூரியன், சந்திரன், அக்னி — மூன்றும் உன்னுள் தான் வேலை செய்கிறது என்று தெளிவாகத் தெரியும்.

சி. எஸ். சிவா

வெள்ளி, 20 மார்ச், 2026

காகபுஜண்டர் ஞானம் பாடல் 16

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 16

பாடல் :

தானென்ற கற்பமடா மதுவுண் டக்கால்
சஞ்சார சமாதியென்ப ததற்குப் பேரு
ஊனென்ற பசிதீரும் கோபம் போகும்.
உதயகிரி தனிற்சென்றூ டுருவிப் பார்க்கத்
தேனென்ற திரையேழுந் தீய்ந்து போகுந்
திரிவாரே உச்சிநடுச் சென்ற போது
கோனென்ற கருவியெல்லா மொடுங்கிப் போகுங்
கூற்றுவனா ராட்டமதைப் பார்க்கலாமே.

உரைநடை விளக்கம்:

இங்கே நமது காகபுஜண்டர் சித்தர் “கற்ப நிலை” பற்றி சொல்கிறார். அந்த நிலை ஒருவனுக்கு வந்துவிட்டால், அந்த நிலையென்பது சாதாரண தியான அனுபவம் இல்லை அதுவே “சஞ்சார சமாதி” நிலையாகும்.இந்ந நிலையில் அனுபவம் பெற்ற பயிற்சியாளன் எங்கு இருந்தாலும் அவனுள் அமைதி என்பது உடன் இருக்கும்.

அந்த நிலையில் உடல் பசியும் கோபமும் குறைந்து மனத்தின். உள்ளே ஒரு சமநிலை உருவாகும்.

“உதயகிரி” என்று சொல்வது தலைக்குள் உதயம். அதாவது உள்ளே எழும் சூரிய ஒளியைப் பார்க்க ஆரம்பிக்கும் நிலையாகும். அப்போது மனத்தில் எழும் ஆசை, அலைச்சல், எண்ணங்கள் — இவை எல்லாம் மெதுவாக கரைந்து போகும்.

அவன் அந்த உச்சி நிலைக்கு சென்றபோது, உடம்பு, புலன், கருவிகள் — இவை எல்லாம் பின்னால் போய்விடும். அவன் உள்ளே மட்டும் நிலைபெறும்.

அந்த நிலையில் கூட, “கூற்றுவன்” — மரணம் — கூட ஒரு நிகழ்வாகத் தான் தெரியும். பயமாக இல்லை. அது ஒரு விளையாட்டு போலப் புரியும்.

இது கேட்டு புரிந்து கொள்ளும் விஷயம் இல்லை.பயிற்சியில்
அந்த நிலை அனுபவம் வந்தால் தான் தெரியும்.

அப்போது தான் புரியும் 
உயிருக்கு பயப்பட வேண்டியது என்று இவ்வுலகில் எதுவும் இல்லை என்று.

சி. எஸ். சிவா

வியாழன், 12 மார்ச், 2026

காகபுஜண்டர் ஞானம் பாடல் 15

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 15

பாடல் :

முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது
  மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும்
சத்தியடா மனந்தானே யேக மாகத்
  தனித்திருந்து நித்திரையைத் தள்ளி மைந்தா!
புத்தியடா பிரமத்திற் புகுந்து கொண்டாற்
  பூலோக மெல்லாந்தான் பணியு முன்னை;
எத்தியே திரியாமற் பிடரி மார்க்கம்
  ஏறுகின்ற வாசியுந்தான் கற்பந் தானே.

உரைநடை விளக்கம்:

இந்தப் பாடலில் சித்தர் மந்திரம் பற்றிய ஒரு முக்கியமான உண்மையைச் சொல்கிறார். முத்தி பெற வேண்டும் என்று நினைத்து மந்திரத்தை மட்டும் மனதில் நினைத்துக் கொண்டே இருந்தால், மனம் இரண்டாகிப் போகும் என்று அவர் எச்சரிக்கிறார். அதாவது மனம் ஒரு பக்கம் மந்திரத்தை நினைக்கும்; இன்னொரு பக்கம் உலகத்தை நினைக்கும். இப்படியாக மனம் இரண்டாகிப் போனால் அதில் நிலையான நிலை வராது.

உன் மனம் அமைதியாக  வேண்டும். அது அலைந்து திரியாமல் ஒருமைப்பட வேண்டும். அதற்காக தான் அவர் “நித்திரையைத் தள்ளி” என்று சொல்கிறார். அதாவது அறியாமை தூக்கத்தை விட்டு விழித்திருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறார்.

மனம் ஒருமையாகி புத்தி பிரம்மத்தில் சென்று நிலைபெற்றால், மனிதனின் உள்ளம் தெய்வீகமாக. மாறிவிடும். அப்போது உலகம் அவனை அடிமையாக்காது; மாறாக அவன் பெற்று நிற்கின்ற நிலைக்கு உலகமே பணிந்து நிற்கும் என்று சித்தர் பெருமான் நமக்கு சுட்டுகிறார்.

இதற்கான வழி என்ன? அலைந்து திரியும் மனத்தை அடக்கி, பிடரி மார்க்கம் என்று சொல்லப்படும் அந்த நடு ஓட்டத்தில் வாசியை ஏற்ற வேண்டும். அதாவது மூச்சின் நுண்ணிய ஓட்டத்தை மேலே செலுத்தி நிலைநிறுத்த வேண்டும்.

அப்படி வாசி மேலே ஏறி நிலைபெற்றால் தான் யோகத்தின் உண்மையான கற்பம் — அதாவது நிலையான அனுபவம் — கிடைக்கும் என்று சித்தர் கூறுகிறார்.

சி. எஸ். சிவா

காகபுஜண்டர் ஞானம் பாடல் 14

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 14

பாடல் :

காணார்கள் பிரம்முந்தா னுதிக்கு முன்னே
  கருணையுள்ள மந்திரங்கள் பிறந்த துண்டோ?
தோணாமல் மந்திரங்க ளனந்தங் கற்றுச்
  சுழுனையென்ற மூக்குநுனி தன்னைப் பார்த்து
வீணாகத் திரிந்து மிகப் பித்தர் போலே
  வேரோடே கெட்டுழல்வான் விருதா மாடு;
கோணாம வண்ணாக்கின் நேரே மைந்தா!
  குறிப்பறிந்து பார்த்தவர்க்கே முத்தி தானே.

உரைநடை விளக்கம்:

இந்தப் பாடலில் சித்தர் மிகவும் நேராக ஒரு உண்மையைச் சொல்கிறார். “பிரம்மம் தோன்றும் முன்பே மந்திரங்கள் இருந்ததா?” என்று கேட்கிறார். அதாவது, மனிதன் உருவாக்கிய மந்திரங்கள் எல்லாம் பின்னர் வந்தவை. ஆதாரம் அதற்கு முன்பே இருந்தது.

பலர் என்ன செய்கிறார்கள் தெரியுமா? எண்ணற்ற மந்திரங்களை கற்றுக் கொள்கிறார்கள். நூல்கள் படிக்கிறார்கள். ஆனால் தங்களுள் உள்ள மைய ஆதாரத்தை நோக்கிப் பார்க்க மறந்துவிடுகிறார்கள். “சுழுமுனை” என்று சொல்லப்படும் அந்த உள் மைய ஆதாரத்தை  அறியாமல், மூக்குநுனியை மட்டும் பார்த்து உட்கார்ந்தால் பயனேதும் இல்லை என்று சித்தர் சுட்டுகிறார்.

அப்படி வழி தெரியாமல் தவறான பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டே  சுற்றிக்கொண்டு இருந்தால், அந்த மனிதன் பித்தன் போல அலைந்து கொண்டே இருப்பான். வாழ்க்கை முழுவதும் தேடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். ஆகவே அடிப்படை குறியைப் பார்க்காமல் தேடுபவனின் அந்த தேடல் பயனின்றியே போய்விடும்.

அதனால் தான் நமது சித்தர் சொல்லுகிறார் கிழட்டு மாடாகி அடிமாடு ஆகிப்போவான் என்பதால் நீங்கள் மனம் சாயாமல், கோணாமல், நேராக உள்ளே சுழுமுனை மையத்தை நோக்கிப் பார்க்க வேண்டும். அந்த உள் யோகக்குறியை உணர்ந்தவனுக்கே விடுதலை.

மந்திரங்கள் பல இருக்கலாம்.
ஆனால் குறி ஒன்று தான்.

அந்த குறியை சரியாக அறிந்து அதில் பயிற்சி செய்து அனுபவம் பெறுபவனுக்கே 
முத்தி என்பது நிச்சயம் கிடைக்கும்.

சி. எஸ். சிவா

காகபுஜண்டர் ஞானம் பாடல் 24

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 24 பாடல் : தானென்ற பிரமத்தை யடுத் திடாமல்   தாரணியில் தெய்வமடா அனந்த மென்றும் ஊனென்ற குருவென்றுஞ் சீட னென்றும்...