காகபுஜண்டர் ஞானம் – பாடல் 14
பாடல் :
காணார்கள் பிரம்முந்தா னுதிக்கு முன்னே
கருணையுள்ள மந்திரங்கள் பிறந்த துண்டோ?
தோணாமல் மந்திரங்க ளனந்தங் கற்றுச்
சுழுனையென்ற மூக்குநுனி தன்னைப் பார்த்து
வீணாகத் திரிந்து மிகப் பித்தர் போலே
வேரோடே கெட்டுழல்வான் விருதா மாடு;
கோணாம வண்ணாக்கின் நேரே மைந்தா!
குறிப்பறிந்து பார்த்தவர்க்கே முத்தி தானே.
உரைநடை விளக்கம்:
இந்தப் பாடலில் சித்தர் மிகவும் நேராக ஒரு உண்மையைச் சொல்கிறார். “பிரம்மம் தோன்றும் முன்பே மந்திரங்கள் இருந்ததா?” என்று கேட்கிறார். அதாவது, மனிதன் உருவாக்கிய மந்திரங்கள் எல்லாம் பின்னர் வந்தவை. ஆதாரம் அதற்கு முன்பே இருந்தது.
பலர் என்ன செய்கிறார்கள் தெரியுமா? எண்ணற்ற மந்திரங்களை கற்றுக் கொள்கிறார்கள். நூல்கள் படிக்கிறார்கள். ஆனால் தங்களுள் உள்ள மைய ஆதாரத்தை நோக்கிப் பார்க்க மறந்துவிடுகிறார்கள். “சுழுமுனை” என்று சொல்லப்படும் அந்த உள் மைய ஆதாரத்தை அறியாமல், மூக்குநுனியை மட்டும் பார்த்து உட்கார்ந்தால் பயனேதும் இல்லை என்று சித்தர் சுட்டுகிறார்.
அப்படி வழி தெரியாமல் தவறான பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டே சுற்றிக்கொண்டு இருந்தால், அந்த மனிதன் பித்தன் போல அலைந்து கொண்டே இருப்பான். வாழ்க்கை முழுவதும் தேடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். ஆகவே அடிப்படை குறியைப் பார்க்காமல் தேடுபவனின் அந்த தேடல் பயனின்றியே போய்விடும்.
அதனால் தான் நமது சித்தர் சொல்லுகிறார் கிழட்டு மாடாகி அடிமாடு ஆகிப்போவான் என்பதால் நீங்கள் மனம் சாயாமல், கோணாமல், நேராக உள்ளே சுழுமுனை மையத்தை நோக்கிப் பார்க்க வேண்டும். அந்த உள் யோகக்குறியை உணர்ந்தவனுக்கே விடுதலை.
மந்திரங்கள் பல இருக்கலாம்.
ஆனால் குறி ஒன்று தான்.
அந்த குறியை சரியாக அறிந்து அதில் பயிற்சி செய்து அனுபவம் பெறுபவனுக்கே
முத்தி என்பது நிச்சயம் கிடைக்கும்.
சி. எஸ். சிவா