மனிதன் வாழ்க்கையில் அடிக்கடி தேடும் ஒன்று உண்டு—
“என்னைவிட உயர்ந்தது எது?” என்ற கேள்வி.
பணம், பதவி, புகழ், அதிகாரம், அறிவு, ஆன்மிகம் என
ஒவ்வொன்றையும் அளவுகோலாக்கி
தன்னைத் தாழ்த்திக் கொள்வதிலும்
மற்றவர்களை உயர்த்திக் கொள்வதிலும்
அவன் காலத்தை கழிக்கிறான்.
ஆனால் உண்மையில்
உன்னைவிட இந்த உலகத்தில் உசந்தது யாருமில்லை
என்பது அகங்காரச் சொல்லல்ல;
அது ஆத்ம சத்தியம்.
இந்த உடல் ஒரு உடை.
இந்த மனம் ஒரு கருவி.
ஆனால் இவை இரண்டையும் உணர்ந்து நிற்கும்
அந்த “நான்” —
அதுவே மனிதனின் உச்ச நிலை.
உலகம் பெரியது போல தோன்றுகிறது.
மலைகள் உயரமாக,
கடல்கள் ஆழமாக,
நட்சத்திரங்கள் தொலைவில்.
ஆனால் அவையனைத்தையும்
“இவை மலை”, “இது கடல்”, “அது வானம்”
என்று அறியும் அறிவு எங்கு எழுகிறது?
உன்னிடம்தான்.
உன்னை அறியாமல்
உலகத்தை அறிய முடியாது.
உன்னை உணராமல்
உயர்வு என்ற சொல்லுக்கு அர்த்தமே இல்லை.
ஒரு மனிதன்
தன்னைத் தாழ்த்திக் கொண்டால்
உலகமே அவனுக்கு மேலாகத் தோன்றும்.
ஆனால்
தன்னை உணர்ந்து கொண்டால்
உலகம் அவனுக்குள் அடங்கும்.
“நான் உயர்ந்தவன்” என்று சொல்வது அகந்தை.
ஆனால்
“என்னுள் உயர்ந்தது ஒன்று இருக்கிறது”
என்று உணர்வது ஞானம்.
அந்த உயர்வு
பிறரை மிதிப்பதில் இல்லை;
பிறரை மதிப்பதில் உள்ளது.
அந்த உயர்வு
எடுத்துக் காட்டுவதில் இல்லை;
உள்ளே அமைதியாக இருப்பதில் உள்ளது.
எனவே
உன்னைவிட இந்த உலகத்தில்
உசந்தது யாருமில்லை—
ஏனெனில்
உலகத்தையே அனுபவிக்கும்
மூலமே நீ.
நீ உன்னை உணர்ந்த நாளே
உலகம் உனக்கு
ஒரு பாடமாக மாறும்.
அன்புடன்,
சி எஸ் சிவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக