கனம் — அதன் உட்பொருளும் சபையின் அங்கீகார நிலைகளும்
“எடை” என்பது ஒன்றை அளந்து அதன் மதிப்பை அறியும் ஒரு முறை. நமது உடலை ஆராய்ந்து, அதனுள் உண்மையான மதிப்புடைய மெய்ப்பொருள் எது என்று நோக்கினால், அது உயிரே.
உயிருக்கான மற்றொரு பெயர் “ஆவி”.
“ஆவிக்கு ஏது எடை?” என்று ஒருவர் வாதிடலாம். ஆனால் ஆவி இல்லாமல் எதையும் தூக்கவோ, செயல்படவோ, ஏன் வாதிடவோ கூட முடியாது அல்லவா?
உடலில் ஆவி இருக்கும் வரை உடல் உயிர்ப்புடன் இயங்குகிறது. அந்த மெய்ப்பொருளாகிய ஆவி உடலை விட்டுப் பிரிந்துவிட்டால், உடல் உயிர்த்தன்மையை இழந்து அழிவை நோக்கிச் செல்கிறது.
இதனையே ஞானப் பொருளில் நான்,
“நம்மை நாறாமல் காக்கும் நாராயணன்”
என்று குறிப்பிடுகிறேன்.
இங்கு “நாராயணன்” என்பது ஒரு பெயரை மட்டும் சுட்டுவதல்ல; நம்முள் உயிராக நின்று, உடலை இயக்கி, உயிர்த்தன்மையுடன் காத்து நிற்கும் பரம்பொருளின் இருப்பைக் குறிக்கும் ஞானக் குறிப்பாகும்.
நம்முள் உயிராக உறையும் அந்த நாராயணனாகிய ஆவியை உணர்ந்து, இப்பிறவியிலேயே அதனைத் தூய்மைப்படுத்தி, பக்குவப்படுத்தி, மெய்ஞ்ஞான நிலையை நோக்கி உயர்த்தப் பாடுபட வேண்டும்.
அதற்கான ஆன்மீகக் கல்விச்சாலைதான் நமது தாயுமானவர் ஞான சபை.
நமது சபையின் ஆன்மீகக் கல்வி, பயிற்சி மற்றும் பக்குவ நிலைகளின் அடிப்படையில் அங்கீகாரங்கள் வழங்கப்படுகின்றன.
“கனம்”
ஆன்மீகக் கல்வியில் பயிலும் மாணவர் நிலை. சபையின் முறையான பயிற்சிகளைப் பெற்று பயின்று வருபவர்கள் “கனம்” என்று அழைக்கப்படுவர்.
“கனம் பொருந்திய”
உயர்கல்வி மாணவர் நிலையைப் போன்று, மேம்பட்ட ஆன்மீகப் பயிற்சிகளைப் பெற்று பக்குவம் அடைந்து, பயிற்சியாளர்களாகவும் செயல்படும் தகுதி பெற்றவர்கள் “கனம் பொருந்திய” என்று அங்கீகரிக்கப்படுவர்.
“மகாகனம்”
பயிற்சி பெறுவதோடு நின்றுவிடாமல், பிறருக்குப் பயிற்சி அளிப்பதிலும் வல்லவர்களாக விளங்கி, கடையனையும் கடைத்தேற்றும் பக்குவம் பெற்றவர்களை இச்சபை “மகாகனம்” என்று அங்கீகரிக்கும்.
“மகாகனம் பொருந்திய”
இதற்கும் மேம்பட்ட ஆன்மப் பக்குவமும் ஞான முதிர்ச்சியும் பெற்று உயர்ந்த நிலையில் விளங்கும் ஆன்மாக்கள் “மகாகனம் பொருந்திய” என்று அழைக்கப்படுவர்.
எனது குருநாதர்
மகாகனம் பொருந்திய எம். ஜெகதீசன் அவர்கள்.
என்னை “மகாகனம் சி. எஸ். சிவா” என்று மட்டும் சுட்டி எழுதினால் போதுமானது.
எனது பார்வையில், இன்றைய நிலையில் முழுமை பொருந்திய மகாத்மாவாக விளங்குபவர் எனது குருநாதரே.
நான் அவரது அடியேன்.
அவரது வழிகாட்டலில் ஒரு ஞானக் கல்விச்சாலையை நிறுவி நடத்திச் செல்லும் ஒருவன் — அவ்வளவே!
எனவே “கனம்”, “கனம் பொருந்திய”, “மகாகனம்”, “மகாகனம் பொருந்திய” என்பவை பெருமைக்காகச் சூட்டப்படும் பட்டங்கள் அல்ல. ஆன்மீகக் கல்வி, பயிற்சி, பக்குவம் மற்றும் பிறரை வழிநடத்தும் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் நமது சபை வழங்கும் அங்கீகார நிலைகளாகவே அவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இதுகுறித்து இனி எவருக்கும் குழப்பம் தேவையில்லை என்று கருதுகிறேன்.
சி. எஸ். சிவா
நிறுவனர் & தலைவர்
தாயுமானவர் ஞான சபை அறக்கட்டளை
சிவார்ப்பணம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக